சாதனைகளை சொல்ல முடியாமல் தரம் தாழ்ந்த பேச்சுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என விருதுநகர் திமுக நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்குக் கேட்டு அவர் இன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சுறுசுறுப்புக்கு பெயர் பெற்ற மக்கள் வாழும் மாவட்டம் தான் விருதுநகர். நான் உங்களை நாடி வந்துள்ளேன். ஓயாமல் உழைக்கும் உங்களை பார்த்து உத்வேகப்படுத்திக்கொள்ள வந்தேன். சங்கரலிங்கனார், பெருந்தலைவர் காமராஜர் ஆகிய தலைவர்களின் மண் இந்த விருதுநகர் மாவட்டம். திமுக ஆட்சியில் தான் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டு இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
நான் தேர்தல் பரப்புரைக்காக பல மாவட்டங்களுக்கு சென்று வந்து விட்டேன். அங்கெல்லாம் திராவிட மாடல் 2.0க்கு மக்கள் டபுள் ஓகே சொல்லி விட்டார்கள். விருதுநகர் மக்களும் தயாராக வேண்டும். அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்சுழி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டும்.
இதில் தங்கம் தென்னரசை எதிர்த்து நிற்கவே எதிர்க்கட்சி வேட்பாளர் விரும்பவில்லை என சொன்னார்கள். விஜய பிரபாகரனுக்கு நான் இங்கு வாக்கு கேட்கும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. மக்கள் ஆணையிட்டால் படத்தில் வேட்பாளராக நடித்தார். அவருக்கு வாக்கு கேட்கும்படியான காட்சியில் நான் வருவேன். இன்று மகனுக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன். மருது சகோதரர்கள் மாதிரி 2 வெயிட்டான அமைச்சர்களை இந்த மாவட்டம் கொடுத்திருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. அதைச் சொல்ல ஒருநாள் போதாது. இன்னும் எத்தனை வேண்டுமானாலும் சொல்லுங்கள். நாம் செய்து தருவேன்.
அதேசமயம் சாதனைகளை சொல்ல முடியாமல் தரம் தாழ்ந்த பேச்சுகளை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பழனிசாமி என்றாலே பொய், பித்தலாட்டம் தான். அவர் சொன்ன பொய்களை ஒரு புத்தகமே போடலாம். கலைஞர் கருணாநிதி பற்றி பழனிசாமி சொன்ன கருத்துக்கு நெல்லை கூட்டத்தில் நான் பதிலடி கொடுத்தேன். அதனை மறைக்க அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.
காமராஜர், ஜானகி ராமச்சந்திரனுக்கு திமுக அவர்களது மறைவின்போது இடம் தர மறுத்ததாக பழனிசாமி தெரிவிக்கிறார். சங்கி கூட்டணியில் சேர்ந்ததால் அவர்களைப் போல வாட்ஸ்அப் வதந்திகளை வாந்தி எடுக்கிறார். காமராஜர் மறைவின்போது சொந்த மகன் போல உடனிருந்து அனைத்தையும் கருணாநிதி செய்தார். பழனிசாமி சொன்ன பொய் உண்மை என்றால் அன்றைக்கே சர்ச்சையாகி இருக்கும். பத்திரிக்கைகளில் செய்தியாக வந்திருக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் பற்றி எழுதிய புத்தகங்களில் கருணாநிதி பற்றி தான் எழுதியிருக்கிறார்கள். ஜானகி எம்ஜிஆர் மறைந்த சில நாட்களில் ராமாபுரம் தோட்டத்தில் உருவப்படத்தை கருணாநிதி தான் திறந்து வைத்தார்.
தப்பு பண்ணால் மன்னிப்பு கேட்பது தான் நல்ல மனிதனுக்கான இலக்கணம். ஆனால் பழனிசாமி மேலே மேலே பொய் சொன்னால் அசிங்கப்பட்டு தான் போவார். அரசு ஊழியர்களை திமுக ஆசை வார்த்தைக் காட்டி ஏமாற்றியதாக சொன்னார். அப்படி நான் செய்திருந்தால் கோட்டையில் அந்த ஊழியர்கள் சங்கத்தினர் என்னை வந்து சந்தித்து இனிப்பு ஊட்டியிருப்பார்களா சொல்லுங்கள். அரசு ஊழியர்கள், ஆசியர்களை நாங்கள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறோம். அவர்களிடம் இருந்து இபிஎஸ்க்கு ஸ்வீட்டும் கிடைக்காது, ஓட்டும் கிடைக்காது” என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

