உழைத்த உழைப்பிற்கு பலன்
மே தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மே தின நினைவு சின்னத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் பொதுமக்கள் மத்தியில் பேசுகையில், மே முதல் நாள் இன்று கொண்டாடப்படுகிறது. உலகிலேயே இந்தியாவில் சென்னையில் தான் உழைப்பாளர் தினம் கொண்டாட தொடங்கினோம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், தொழிலாளர் உரிமைக்கா போராடினோம். இன்று நம்முடைய கழகத்தினர் உழைத்திருக்க கூடிய உழைப்பிற்கு பலன் வருகிற 4ஆம் தேதி பெற இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை, ஒரு துளி அளவுக்கு கூட மாற்றமில்லை. கருத்துகணிப்பையடுத்து கூறுவதாக கருத வேண்டாம், கழகத்தின் உணர்வை அறிந்த காரணத்தால் அந்த கருத்தை எடுத்துரைத்துள்ளேன்.
மே தினம் விடுமுறை
மே முதல் நாள் தொழிலாளர்களுக்கு மதிப்பு, மரியாதை கிடைக்ககூடிய நாளாக கொண்டாடு வருகிறோம். அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு விடுமுறையாக அறிவித்து மே தினம் கொண்டாட தொடங்கினார். ஊதியத்தோடு கூடிய விடுமுறையாக மட்டுமல்ல அந்த விடுமுறை நாளை சட்டமாக்கி தந்தவர் கலைஞர் கருணாநிதி, தமிழ்நாட்டில் மட்டும் தான் மே முதல் நாள் அரசு விடுமுறையாக கொண்டாடப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த விடுமுறை நாளை கொண்டாட வேண்டும் எடுத்து கூறி, பிரதமராக இருந்த வி.பி. சிங் இதனை ஏற்றுக்கொண்டு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஊதியத்தோடு விடுமுறை அறிவித்து இன்று கொண்டாடப்படுகிறது.

