DMK MK Stalin: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்து ஆறு மாதங்களுக்கு எந்தவித தொந்தரவும் வழங்கமாட்டோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கும் வரை எந்த இடையூறும் செய்யமாட்டோம் எனவும், ஆறு மாதங்களுக்கு எந்தவித பிரச்னைகளையும் செய்யமாட்டோம் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில் பேசுகையில், தமிழ்நாட்டில் உடனடியாக ஒரு அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படுவதையோ அல்லது மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளாராம். அதேநேரம், புதியதாக அமையும் அரசு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும் என்றும், தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் எதிர்பார்ப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். குறிப்பாக தனது முன்னுரிமைப் பட்டியலில் முதலிடம் வகிப்பது எது என்று கேட்டபோது, ”புதிய அரசாங்கம் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டத்தைத் தொடர வேண்டும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் தொடர வேண்டும்” என ஸ்டாலின் தெரிவித்ததாக ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
”விஜய் சொன்னதை செய்வது கடினம்”
மகளிருக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என விஜய் வாக்குறுதி அளித்தது குறித்த கேள்விக்கு, “அந்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது கடினம். நாங்கள் செய்தது போல மகளிருக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 கொடுங்கள. 2021 தேர்தலின்போது கட்சி அளித்த வாக்குறுதிகளில் 90 சதவிகித்தை தனது அரசு நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக நீட் தேர்வை நிறுத்துவது போன்ற சிலவற்றைச் செய்ய முடியவில்லை. இந்தத் தேர்தலிலும், எங்களால் நிறைவேற்றக்கூடியவற்றை மட்டுமே நாங்கள் வாக்குறுதியளித்தோம். ரேஷன் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படு, என்பது போன்ற வாக்குறுதிகளை தவெக நிறைவேற்றும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் செய்தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்,” என்று ஸ்டாலின் பதிலளித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி
ஸ்டாலின் தெரிவித்த கருத்தின் மூலம், அரைநூற்றாண்டுக்கும் பிறகு அதிமுக மற்றும் திமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக வெளியான தகவல் வெறும் வதந்தி மட்டுமே என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இதனிடையே, 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தபோதும், தனிப்பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவு பெற்ற பிறகு பதவிப்பிரமாணம் செய்து கொள்ளலாம் என தவெக தலைவர் விஜய்க்கு ஆளுநர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை நாடுவதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். இதன் காரணமாக இன்று திட்டமிடப்பட்டு இருந்த பதவியேற்பு நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Author : குலசேகரன் முனிரத்தினம்

