Dailyhunt
MSR Rajavarman: அதிமுகவில் விருப்பமனு கூட கொடுக்கல.. திருச்சுழி தொகுதி வேட்பாளராக ராஜவர்மன் அறிவிப்பு ஏன்?

MSR Rajavarman: அதிமுகவில் விருப்பமனு கூட கொடுக்கல.. திருச்சுழி தொகுதி வேட்பாளராக ராஜவர்மன் அறிவிப்பு ஏன்?

ABP Nadu 2 weeks ago

திருச்சுழி தொகுதியில் போட்டியிட நான் விருப்பமனு கூட தாக்கல் செய்யவில்லை என அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்கள் தொடங்கி வேட்பாளர்கள், தொண்டர்கள் என அனைவரும் தீவிரமாக வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். இப்படியான நிலையில் அதிமுக கூட்டணியில் விருதுநகரின் சாத்தூர் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடவுள்ளார்.

அதேசமயம் 2019ம் ஆண்டு நடைபெற்ற சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் ராஜவர்மன் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். ஆனால் 2021ம் ஆண்டு அவருக்கு சீட் தரப்படாததால் அமமுகவில் இணைந்து போட்டியிட்டார். இம்முறை அவர் 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனிடையே மீண்டும் அதிமுகவுக்கு வந்த ராஜவர்மனுக்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் அந்த தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவு என ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.

கட்சி நிர்வாகிகள் இடையே பேசிய அவர், “திருச்சுழி தொகுதியில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்த 27 பேரும் தேர்தலில் போட்டியிட தகுதியானவர்கள். எனது சாத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சிக்கு அந்த தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது என அறிவிக்கப்பட்டது. உடனடியாக நான் அங்கு பணி மேற்கொள்ள தயாராகி விட்டேன். நான் சத்தியமாக சொல்கிறேன். திருச்சுழி தொகுதியில் நான் சீட் கேட்கவே இல்லை. விருப்ப மனு தாக்கல் செய்யவும் இல்லை. பாண்டி கோயில் மீது ஆணையாக இதனைக் கூறுகிறேன்.

27 பேர் விருப்பமனு தாக்கல் செய்தும் எப்படி எனக்கு சீட் கொடுத்தார்கள் என அவர்கள் எதுவும் நினைத்து விடக்கூடாது என்பதால் இதனை தெரிவிக்கிறேன். என்னை இங்கு வேட்பாளராக நிறுத்தியது பொதுச்செயலாளராக எடுத்த முடிவு தான். தண்ணீர் பாய்ச்சுவது தொடங்கி அனைத்து வேலைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன். வெள்ளாமையை கொண்டு போய் சேர்க்க வேண்டியதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். எடப்படி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும். ராஜவர்மன் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும். இந்த 20 நாட்களை முழு மூச்சாக பணியாற்றுங்கள். நான் 5 ஆண்டுகாலம் இந்த தொகுதி மக்களுக்கு உழைத்து செருப்பாக பணியாற்றுவேன். இது சத்தியம்” என ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.

கடந்த முறை அதிமுகவும், அமமுகவும் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் அக்கட்சிக்கான வாக்குகள் பிரிந்ததால் திமுக சாத்தூர் தொகுதியில் எளிதாக வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu