Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைப் பரோலில் விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளைப் பரோலில் விடுதலை செய்ய எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

ABP Nadu 2 weeks ago

மிழகச் சிறைகளில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கு நீண்டகால பரோல் மற்றும் கருணை அடிப்படையிலான நிரந்தர விடுதலை வழங்கிட வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியைச் சிறையிலேயே கழித்துவிட்ட இந்த சிறைவாசிகள், தற்போது முதுமையிலும் கடுமையான உடல்நலக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றம் மூலம் பரோல் நீட்டிப்பு பெற்று குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த இவர்கள், கடந்த மே மாதம் பரோல் காலம் முடிந்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், அரசின் தொடர்ச்சியான தாமதங்களால் அவர்கள் மீண்டும் சிறைக்குத் அனுப்பப்பட்டது சிறைவாசிகளையும் அவர்களது குடும்பங்களையும் பெரும் கவலையிலும் மன உளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உறுதிமொழிக்கு பின்னும் நீடிக்கும் தாமதம்

புதிய அரசு பொறுப்பேற்றவுடன், சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு உள்ளிட்ட பலரது முயற்சியால், கடந்த மே 29 ஆம் தேதி முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் விரைவில் பரோலில் விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்திருந்ததையும், அதற்கான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டதாகக் கூறப்பட்ட நிலையிலும், இன்றுவரை பரோல் விடுதலை சாத்தியமாகாதது ஏன் என்றும், இந்த நிர்வாகத் தாமதத்திற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் முகம்மது முபாரக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மாநில அரசின் அதிகாரமும் முதல்வருக்கு கோரிக்கையும்

மேலும், நீண்டகாலச் சிறைவாசிகளுக்குப் பரோல் வழங்குவதற்கும், கருணை அடிப்படையில் நிரந்தர விடுதலை அளிப்பதற்கும் மாநில அரசுக்கு முழு அதிகாரம் உண்டு என்பது பேரறிவாளன் வழக்கின் மூலம் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி எவ்விதப் பாரபட்சமுமின்றி அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எனவே, கால் நூற்றாண்டு காலத்தைத் தாண்டிய இந்த சிறைவாசத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வர் இக்கோரிக்கையைத் தனிப்பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், இறுதி விடுதலைக்கான நடைமுறைகள் முடியும் வரை முதற்கட்டமாக மீண்டும் நீண்டகாலப் பரோல் வழங்கிட அவசர உத்தரவு பிறப்பிப்பதோடு, நிரந்தர விடுதலைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu