இந்தியாவில் மின்சார பைக்குகளுக்கான தேவை சீராக அதிகரித்து வருகிறது. இதுவரை மின்சார ஸ்கூட்டர்களே சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தன, ஆனால், இப்போது படிப்படியாக வாடிக்கையாளர்கள் மின்சார பைக்குகள் மீதும் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, ஓபன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய மின்சார பைக்கான ரோர் ஈவோ, அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்நிறுவனம் தற்போது இந்த பைக்கின் விநியோகத்தை தொடங்கியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அறிமுகப்படுத்தப்பட்ட வெறும் 15 நாட்களுக்குள், இது 25,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.
நிறுவனத்தின் கூற்றுப்படி, முதல் தொகுதி(Batch) பைக்குகள் ஒரு சிறப்பு நிகழ்வின் போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வரும் நாட்களில் நாடு முழுவதும் உள்ள சுமார் 150 ஷோரூம்கள் வழியாக விநியோகம் தொடங்கும். அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக் கூடாது என்பதற்காக, உற்பத்தியை விரைவுபடுத்தவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஓபன் எலக்ட்ரிக் நிறுவனம் ஆண்டுக்கு 1,00,000 மின்சார மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
பைக்கின் விலை மற்றும் செயல்திறன்
விலையைப் பொறுத்தவரை, ஓபன் ரோர் ஈவோ (Oben Rorr EVO) மே 2026-ல் 1.25 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. செயல்திறன் அடிப்படையில், இந்த பைக் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் 9 kW மின்சார மோட்டார் மற்றும் 3.4 kWh LFP பேட்டரி இடம்பெற்றுள்ளது. ஒரே சார்ஜில் இந்த பைக்கால் 180 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த பைக்கின் அதிகபட்ச வேகம், மணிக்கு 110 கிலோமீட்டர் ஆகும். மேலும், இது வெறும் 3 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது. இதில் ஃட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பேட்டரியை வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். மேலும், இந்த பேட்டரிக்கு அந்நிறுவனம் 8 வருட உத்தரவாதத்தையும் வழங்குகிறது.
பைக்கின் சிறப்பு அம்சங்கள்
சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, ஓபன் ரோர் ஈவோ பல நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்ஐக்யூ (SmartIQ) தொழில்நுட்பத்தைக் கொண்ட, இந்தத் துறையின் முதல் பைக் இதுவே என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான அமைப்பு, ஓட்டும் சூழல்களுக்கு ஏற்ப பைக்கின் செயல்திறனை மேம்படுத்துவதோடு, பயண தூரத்தை சுமார் 15 சதவீதம் வரை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேலும், இந்த பைக்கில் புரொஜெக்டர் ஹெட்லைட், 5-அங்குல வண்ண டிஎஃப்டி டிஸ்ப்ளே, ஓவர்-தி-ஏர் (OTA) அப்டேட்கள், நேவிகேஷன், ஜியோ-ஃபென்சிங், ரிமோட் இமொபிலைசேஷன் மற்றும் ஆர்கஸ் கனெக்டட் டெக்னாலஜி உள்ளிட்ட பல ஸ்மார்ட் அம்சங்களும் உள்ளன.
நல்ல மைலேஜ், ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள், கவர்ச்சிகரமான தோற்றம் என, இந்த ஓபன் ரோர் ஈவோ மின்சார பைக் இளம் தலைமுறையினரை வெகுவாக கவர்ந்து வருகிறது.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

