சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயில் தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து, ஏப்ரலில் உச்சத்தை எட்டியது. தகிக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களத்தில் வெயிலும் போட்டி போட்டுக்கொண்டு உக்கிரத்தை ஏற்றியது. இதனால் பொது மக்கள் தவித்து வந்தனர்.
சட்டென்று மாறிய வானிலை
இதற்கிடையே திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்றும் வீசியது.
இந்த நிலையில் சென்னையில் திடீரென இன்று (ஏப்ரல் 6) வானிலை குளிர்ந்தது. காலையில் இருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்த வானிலையில் மாற்றம் ஏற்பட்டது. முற்பகலில் காற்று பலமாக வீசியது. தொடர்ந்து இடியுடன் கூடிய மழையும் பெய்தது.
எங்கெல்லாம் மழை?
ஆயிரம் விளக்கு, சைதாப்பேட்டை, வட பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து தீர்த்தது. தற்போது மழை நின்று தூறல் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி, தென்காசி, நெல்லை ஆகிய 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 8 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மாலை 4 மணி வரை மழை தொடர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசியல் தலைவர்கள் நிம்மதி
இந்த நிலையில் அரசியல் தலைவர்கள், வெயில் தாக்கம் ஏதுமின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியும் என்று மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Author : க.சே.ரமணி பிரபா தேவி

