தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே வெயில் சதம் அடித்து வருகிறது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெப்பத்தின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கியுள்ளனர்.
இத்தகைய சுட்டெரிக்கும் சூழலில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு, மக்களுக்கு மிகப்பெரிய ஆறுதலைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
வெப்பத்தின் பிடியில் தமிழகம்
தமிழகத்தின் பல பகுதிகளில் வெப்பம் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், வறட்சியான சூழலை மாற்ற ஒரு பலத்த மழை பெய்யாதா என ஏங்கிக் கொண்டிருந்த மக்களுக்கு, தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி சாதகமான செய்தியைப் சுமந்து வந்துள்ளது.
குளிர்ச்சியைத் தந்த மழை
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையைப் பொறுத்தவரை, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் பெய்த 7 செ.மீ., கனமழை ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் தகித்துக் கொண்டிருந்த நிலப்பரப்பு, இந்த மழையினால் சற்று குளிர்ந்துள்ளது. இதே போன்ற ஒரு நிம்மதியான சூழல் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளை மழை எச்சரிக்கை
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகாங்கை மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக வாடிக்கொண்டிருந்த பயிர்களுக்கு இந்த மழை உயிர்நீராக அமையும். முக்கியமாக, மதுரை மற்றும் விருதுநகர் போன்ற வெப்பம் அதிகம் நிலவும் மாவட்டங்களில் இந்த மழை வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியான சூழலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் அறிவுரை
இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், மக்கள் இடியின் போது மரங்களின் அடியிலோ அல்லது மின் கம்பங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Author : கிஷோர்

