தென்னிந்தியத் திரையுலகின் முன்னணித் தயாரிப்பாளரும், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ஆர்.பி.
சவுத்ரி சாலை விபத்தில் காலமானார்.
ராஜஸ்தானில் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பும்போது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவரது மறைவு டோலிவுட் மற்றும் கோலிவுட் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் திரைப்பயணத்தில் ஆர்.பி. சவுத்ரி மிக முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் திரைவாழ்வை மாற்றிய 'பூவே உனக்காக'
இன்று பாக்ஸ் ஆபீஸின் வசூல் சக்கரவர்த்தியாகவும், ஒரு அரசியல் கட்சித் தலைவராகவும் விஜய் உயர்ந்திருந்தாலும், அவரது தொடக்கக் காலம் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் நடித்தபோதும் ஆரம்பக் கட்டத்தில் பல தோல்விப் படங்களையே சந்தித்தார். அந்தச் சூழலில், விஜய்யை ஒரு நட்சத்திரமாக மாற்றிய பெருமை ஆர்.பி. சவுத்ரியையே சாரும். 1996-ல் இயக்குனர் விக்ரமன் சொன்ன கதையை நம்பி, ஆர்.பி. சவுத்ரி தயாரித்த 'பூவே உனக்காக' திரைப்படம் விஜய்யின் கரியரை உச்சத்துக்கே கொண்டு சென்றது. அதுவரை விஜய்க்குப் பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இல்லாத நிலையில், இப்படம் குடும்ப ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு வரவழைத்தது. இதன் தாக்கம் இந்தியத் திரைத்துறையையே திரும்பிப் பார்க்க வைத்ததுடன், தெலுங்கில் 'சுபகான்ஷாலு', கன்னடத்தில் 'ஈ ஹிருதயா நினகாகி' மற்றும் ஹிந்தியில் 'பதாய் ஹோ பதாய்' எனப் பல மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
ஆக்ஷன் ஹீரோ அவதாரம்
'பூவே உனக்காக' படத்திற்குப் பிறகு விஜய் மற்றும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் கூட்டணியில் வெளியான படங்கள் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. குறிப்பாக 1999-ல் இயக்குனர் எழில் இயக்கத்தில் வெளியான 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படம் விஜய்யின் திரைவாழ்வை புதிய திசைக்கு இட்டுச் சென்றது. இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு உணர்வுப்பூர்வமாக மக்களைச் சென்றடைந்தது. பின்னர் 2005-ஆம் ஆண்டு வரை பெரும்பாலும் குடும்பக் கதைகளில் கவனம் செலுத்திய விஜய், ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுக்க விரும்பினார். அப்போதும் அவருக்குக் கைகொடுத்தது ஆர்.பி. சவுத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தான்.
விஜய் அஞ்சலி
பேரரசு இயக்கத்தில் வெளியான 'திருப்பாச்சி' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைத் தகர்த்ததுடன், விஜய்யின் ஆன்-ஸ்கிரீன் பிம்பத்தையே முழுமையாக மாற்றியது. விஜய்யின் திரைப்பயணத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அவருக்கு எப்படிப்பட்ட கதை தேவை என்பதை ஆர்.பி. சவுத்ரி சரியாகக் கணித்து வழங்கினார். இன்று விஜய் அடைந்துள்ள இமாலய வளர்ச்சிக்கு அவர் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளமே முக்கியக் காரணம். இத்தகைய ஆத்மார்த்தமான பந்தத்தைக் கொண்ட தனது ஆசான் ஆர்.பி. சவுத்ரியின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜய், நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆர்.பி. சவுத்ரியின் உடலுக்குத் தங்களது இறுதி மரியாதையைச் செலுத்தி வருகின்றனர்.
Author : ஜேம்ஸ்

