விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வடக்கு பை முனையில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.60.78 கோடி நிதி ஒதுக்கீடு
விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு விபத்துகளை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) சார்பில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் திண்டிவனம் அடுத்த தென்பசியார், முண்டியம்பாக்கம் மற்றும் விக்கிரவாண்டி வடக்கு பை முனை ஆகிய 3 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க ரூ.60.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணிகளை மேற்கொள்ள சென்னை பி.எஸ்.டி. கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்துடன் நகாய் ஒப்பந்தம் செய்தது.
ஆமை வேகத்தில் பணிகள்
விக்கிரவாண்டியில் கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து, வடக்கு பை முனையில் கடந்த 2025-ம் ஆண்டு மேம்பாலம் அமைப்பதற்கான பில்லர்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கின.
3 இடங்களிலும் ஒரே நிறுவனத்திற்கு பணிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் முறையான நிர்வாகம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தொடர்ந்து மெதுவாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது வடக்கு பை முனை மற்றும் மேலக்கொந்தை-செஞ்சி ரோடு பகுதியில் மேம்பால பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு புறத்தில் மட்டும் மண் மேடு
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் சாலையில் மேம்பாலத்துடன் இணைக்கும் வகையில் மண் கொட்டி மேடு அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஆனால் இந்த பணியும் மிகவும் மெதுவாக நடைபெற்று வருகிறது.
அதேநேரத்தில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் சாலையில் மேம்பால இணைப்புக்கான மண் மேடு அமைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் மேம்பாலம் கட்டுமான பணிகள் முழுமை பெறாமல், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
23 கிராம மக்கள் அவதி
விடுமுறை மற்றும் விழாக்காலங்களில் சர்வீஸ் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிப்பதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மேற்கு பகுதியில் உள்ள சுமார் 23 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பை சாலையை கடந்து செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்தத்தை மாற்ற நகாய் முடிவு?
மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நகாய் அதிகாரிகள் சார்பில் ஒப்பந்த நிறுவனத்திடம் பலமுறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஒப்பந்த நிறுவனம் விளக்கம் அளித்து பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால், வரும் வாரத்தில் ஒப்பந்த நிறுவனத்திடம் இறுதி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப நகாய் அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பணிகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் தற்போதைய ஒப்பந்தத்தை ரத்து செய்து, பணியை வேறு நிறுவனத்திற்கு மாற்றுவது குறித்தும் நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிகிறது.
பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
விக்கிரவாண்டி வடக்கு பை பகுதியில் மேம்பால பணிகள் தாமதமாவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதி என்பதால் பணிகளை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறுவதை நகாய் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தேவைப்பட்டால் பணியை வேறு நிறுவனத்திடம் ஒப்படைத்து, மேம்பால பணியை விரைந்து முடித்து போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Author : சிவரஞ்சித்

