Dailyhunt
Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்?  பேட்டரி, விலை

Royal Enfield Electric Bike: ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் - லேசான எடை, ரேஞ்ச், டாப் ஸ்பீட்? பேட்டரி, விலை

ABP Nadu 1 month ago

Royal Enfield Flying Flea C6: ராயல் என்ஃபீல்டின் ஃப்ளையிங் ஃப்ளீ C6 மோட்டார்சைக்கிள், ப்ராண்டின் மிகவும் லேசான மாடலாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள்

பல மாத காத்திருப்புக்குப் பிறகு, ராயல் என்ஃபீட் நிறுவனத்தின் முதல் மின்சார மோட்டார் சைக்கிள் தொடர்பான பல்வேறு தகவல்கள் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளன. ஃப்ளையிங் ஃப்ளீ C6 மோட்டார்சைக்கிள் முதன்முறையாக கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற EICMA எனப்படும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. அதைதொடர்ந்து பலமுறை இந்த வாகனம் சாலை பரிசோதனையின் போது புகைப்படங்களில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ஃப்ளையிங் ஃப்ளீ C6 - என்ன எதிர்பார்க்கலாம்?

ஃப்ளயிங் ஃப்ளீ என்பது மின்சார மோட்டார் சைக்கிள்களுக்காக ராயல் என்ஃபீல்ட் தொடங்கியுள்ள துணை நிறுவனமாகும்.அதன் சார்பில் இருந்து சந்தைப்படுத்தப்பட உள்ள முதல் மின்சார மோட்டார் சைக்கிளான C6 மாடலின் விவரங்களை வெளியிட்டு, புதிய L ப்ளாட்ஃபாமில் அந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஃப்ளையிங் ஃப்ளீ C6 - பேட்டரி, ரேஞ்ச்

C6 மோட்டார்சைக்கிளானது 3.91KWh லித்தியம் பேட்டரி பேட்டரி பேக்கை கொண்டு 154 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என கூறப்படுகிறது. ஒரு ஜோடி பெர்மனண்ட் மேக்னெட் சிங்க்ரோனஸ் மோட்டாரை கொண்டு, அதிகபட்சமாக 15.4KW மற்றும் 60Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இந்த சக்தியானது பெல்ட் ட்ரைவ் மூலம் பின்புற வீலிற்கு மாற்றப்படுகிறது. 3.7 விநாடிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் எனும் வேகத்தை எட்டும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 115 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனத்தில் சிட்டி, ரெயின், நெடுஞ்சாலை மற்றும் ஸ்போர்ட் என நான்கு வகையான மோட்கள் உள்ளன. இதுபோக பயனரின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு கூடுதல் மோடும் அமைத்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வழங்கப்படும் ஆன் - போர்ட் சார்ஜர் மூலம் 2 மணி நேரம் 16 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகித சார்ஜ் என்ற நிலை எட்டப்படுமாம்.

ஃப்ளையிங் ஃப்ளீ C6 - அளவீடுகள்

2024ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டதை போலவே C6 மாடலின் உற்பத்தி எடிஷனும் உள்ளது. இது இரண்டாம் உலகப்போரின் போது கிர்டர் ஃபோர்க் கொண்டிருந்த ஃப்ளையிங் ஃப்ளீ மாடலின் தாக்கத்தை பெற்றுள்ளது. இன்றைய காலகட்டத்திற்கு இது மிகவும் தனித்துவமானதாக கருதப்படுகிறது. பின்புற அமைப்பு வழக்கமானதாகவே உள்ளது. முன் மற்றும் பின்பக்கம் என இரண்டு பக்கங்களிலும் மோனோஷாக் சஸ்பென்ஷன் உள்ளது. 823 மில்லி மீட்டர் இருக்கை உயரம் மற்றும் 207 மில்லி மீட்டர் உயர க்ரவுண்ட் க்ளியரன்ஸ் கொண்டுள்ளது. வாகனத்தின் மொத்த எடை வெறும் 124 கிலோ மட்டுமே ஆகும். ராயல் என்ஃபீல்ட் ப்ராண்ட் சார்பில் சந்தைக்கு வரவுள்ள மிகவும் எடைகுறைந்த மாடல் எனும் பெருமையை பெறுகிறது.

ஃப்ளையிங் ஃப்ளீ C6 - அம்சங்கள்

ப்ராண்டின் முதல் மின்சார மோட்டார் சைக்கிளானது இரண்டு முனைகளிலும் 19 இன்ச் வீல் மற்றும் 90-செக்ஷன் ட்யூப்லெஸ் டயர்களை கொண்டுள்ளது. வழக்கமானதை காட்டிலும் இது குறுகியதாக இருந்தாலும், ரேஞ்சை அதிகப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. 260mm முன்புற டிஸ்க் மற்றும் 220mm பின்புற டிஸ்க் மூலம் ப்ரேக்கிங் பணிகள் கையாளப்படுகின்றன. ஸ்விட்சபள் ரியர் உடன் கூடிய டூயல் சேனல் ABS வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இதில், ட்ராக்ஷன் கன்ட்ரோல், கார்னெரிங் ட்ராக்ஷன் கன்ட்ரோல், டச் அடிப்படையிலான 3.5 இன்ச் டேஷ்போர்டானது ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வசதியை வழங்குகிறது.

ஃப்ளையிங் ஃப்ளீ C6 - விலை

ராயல் என்ஃபீல்ட் நிறுவனமானது தனது முதல் ஃப்ளையிங் ஃப்ளீ விற்பனை நிலையத்தை, வரும் 10ம் தேதி பெங்களூருவில் திறக்க உள்ளது. அப்போது C6 மாடலின் விலை விவரங்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. உள்ளூர் சந்தையில் இந்த வாகனமானது அல்ட்ராவைலெட் F77, X47 க்ராஸ் ஓவர் ஆகியவற்றுடன் நேரடியாக மோதுகிறது. இதுபோக ரேப்டி T 30, ஏதர் 450 அபெக்ஸ்,ஓலா ரோட்ஸ்டர் ப்ரோ மற்றும் TVS X ஆகிய வாகனங்களுடனும் போட்டியிடுகிறது.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu