சேலம் மேட்டூர் அணை திறப்புக்குச் சென்ற முதலமைச்சர் விஜய் மூதாட்டி ஒருவர் வீட்டுக்குச் சென்ற சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம் விஜய் வருகைக்குப் பின் பாட்டியின் நிலைமை வேறு மாதிரி மாறியுள்ளது.
சேலத்தில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில் ஜூன் 12ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணை பருவமழை பொய்த்ததால் செப்டம்பர் 1ம் தேதியான நேற்று திறக்கப்பட்டது. முதல்முறையாக முதலமைச்சர் விஜய் நேரடியாக சேலம் சென்று மேட்டூர் அணை நீரை விவசாயத்திற்காக திறந்து வைத்தார். இதற்கான சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் சென்ற அவர் பின்னர் சாலை மார்க்கமாக மேட்டூர் பயணித்தார்.
வழிநெடுகிலும் விஜயை வரவேற்று தவெக கொடி, போஸ்டர், பேனர், கட் அவுட் என சேலம் மாநகரமே அமர்க்களப்பட்டிருந்தது. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை விஜயை காண ஆவலுடன் காத்திருந்தனர். மேட்டூர் அணைக்கு செல்லும்போது, திரும்பி விமன நிலையம் வரும்போதும் ரோடு ஷோ நிகழ்த்தி விஜய் மக்களை மகிழ்வித்தார்.
பாட்டி வீட்டுக்கு திடீர் விசிட்
இந்த நிலையில் சேலம் சின்னக்காவூர் பகுதியில் விஜயைக் காண ஏராளமான விவசாய பெருமக்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வாகனத்தில் இருந்து இறங்கி நேரில் சந்தித்தார். அதில் விவசாயில் ராமசாமி - பழனியம்மாள் வீட்டிற்கு சென்று திடீரென சென்று நலம் விசாரித்தார். அங்கிருந்த ராமசாமியின் சகோதரி செல்லம் என்ற மூதாட்டியிடம் விஜய் அன்பாக உரையாடினார். மூதாட்டி விஜயை கைப்பிடித்து அழைத்துச் சென்றதும், விஜய் அவருக்கு ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள கண்ணாடியை பரிசாக வழங்கிய காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வைரலாகின. உடனடியாக எம்ஜிஆரை போல விஜய் என இருவரும் வயதான பெண்மணிகளின் அன்பினில் திளைக்கும் புகைப்படங்கள் ட்ரெண்டாக தொடங்கியது.
செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி செல்லம், உங்களைப் பார்த்து பேசியது நம்ப முடியவில்லை என சொல்ல விஜய் சிரித்தார். கண்ணாடி போட்டுக்கோங்க என தன் கூலிங் கிளாஸைக் கொடுத்தார். எல்லாருக்கும் கை காட்டுங்கள் என சொன்னார். நாங்கள் இருவரும் கை அசைத்தோம். சாப்பிட சொன்னதற்கு நான் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன். உங்களுடம் பேசிடதே சாப்பிட்டது போல இருக்கிறது என சொன்னார் என தெரிவித்தார்.
போட்டோ ஸ்பாட்டாக மாறிய பாட்டி வீடு
அவ்வளவுதான் விஜய் வந்து விட்டு சென்ற சில நிமிடங்களில் பாட்டியின் வீடு போட்டோ ஸ்பாட்டாக மாறிவிட்டது. உள்ளூர் மக்கள் பலரும் அங்கு வந்து பாட்டியுடனும், விஜய் கொடுத்த கூலிங் கிளாஸ் அணிந்து போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டனர். மேலும் பாட்டியை சந்திக்கும்போது புடவை தொடங்கி பல்வேறு பொருட்களையும் பரிசாக வழங்கினர். இப்படியாக மினி டூரிஸ்ட் ஸ்பாட்டாக சின்னக்காவூர் பகுதி மாறியுள்ளது.
Author : பேச்சி ஆவுடையப்பன்

