தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், வேல்முருகன் என்ற பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் பாடகரும், கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோயில் சென்றார்.
அங்கு அவர் சுவாமி தரிசனம் மேற்கொண்டு பக்திப் பரவசத்தில் பாடல் பாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு, அதன் தலைவர் விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த தரிசனத்தை மேற்கொண்டதாக வேல்முருகன் தெரிவித்தார். கோயிலில் இருந்த பக்தர்கள் மத்தியில் அவர் தனது தனித்துவமான குரலில் “சேவல் கொடி பறக்குது...” என்ற பாடலைப் பாடினார். இந்த பாடல், த.வெ.க. கட்சியின் சின்னமான சேவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும், வெற்றியின் வேகத்தையும் உற்சாகத்தையும் பிரதிபலிப்பதாகவும் கூறப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், “மருதமலை முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் இங்கு தான் படித்தேன்; அதனால் அடிக்கடி வந்து முருகனை தரிசிப்பது வழக்கம்,” என்றார். மேலும், தன்னுடைய பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்படுவதற்கும் முருகன் அருள் காரணம் எனவும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
த.வெ.க. கட்சியின் வெற்றி குறித்து பேசுகையில், “மக்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தார்கள். அதற்கான ஆதரவை வாக்குகள் மூலம் வெளிப்படுத்தி இன்று வெற்றி அளித்துள்ளனர்,” என்றார். முருகனை நம்புபவர்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்றும், “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என உற்சாகமாக கூறினார்.
மேலும், விஜயின் அரசியல் பயணம் தொடர்ந்து வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று முருகனிடம் வேண்டியதாகவும் தெரிவித்தார். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் விஜய் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிகழ்வு கோயிலில் இருந்த பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
Author : பிரகாஷ்

