Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

ABP Nadu 1 week ago

ஞ்சாவூர்: பொது சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் மேற்பார்வை செவிலியர்களை அரசு மருத்துவமனைகளுக்கு பணியிட மாற்றம் செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சாவூரில் செவிலியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், மாவட்ட வாரியாக தமிழக முதலமைச்சருக்கு அனுப்பப்பட உள்ளதாக செவிலியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம்

தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டத்திலும் பொது சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் ஒன்று திரண்டு கையெழுத்து இயக்கத்தை நடத்தினர்.இந்த இயக்கத்தை சங்கத்தைச் சேர்ந்த திறன் மேம்பாட்டு செவிலியர்களான லதா, திருநாவுக்கரசி, காவேரி, ஜமுனா, காவேரிசெல்வி, பீமா உள்ளிட்டோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கையெழுத்திட்டனர். பெறப்பட்ட கையெழுத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, மாவட்ட வாரியாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரப் பணிகளில் முக்கிய பங்கு

கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் கூறுகையில், தமிழக பொது சுகாதாரத்துறையில் மாவட்ட மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் கீழ் பணியாற்றும் 192 மேற்பார்வை செவிலியர்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாவட்ட பயிற்சி குழு, மாவட்ட பொது சுகாதார அலுவலகம் மற்றும் துணை சுகாதார இயக்குனர் அலுவலகங்களுடன் இணைந்து பல்வேறு முக்கிய பொது சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தாய்-சேய் நலன் பாதுகாப்பு, நோய்த்தடுப்பு திட்டங்கள், புதிதாக நியமிக்கப்படும் செவிலியர்களுக்கான பயிற்சி, சுகாதார நிலையங்களின் தர மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.

சுகாதாரத் திட்டங்கள் பாதிக்கப்படும் என அச்சம்

மேலும், மாவட்ட பயிற்சி குழு அறிக்கைகள் தயாரித்தல், தாய்-சேய் நலன் தொடர்பான அறிக்கைகள் பராமரித்தல், அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணிகளை கண்காணித்தல், தேசிய தரச்சான்று பெறுவதற்கான பணிகள், மகப்பேறு சேவைகளின் தரத்தை உயர்த்துதல் மற்றும் சுகாதார நிலையங்களின் தர ஆய்வு உள்ளிட்ட பல்வேறு பணிகளிலும் மேற்பார்வை செவிலியர்கள் முக்கிய பங்கு வகித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு மறுபணியமர்த்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செவிலியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணியிட மாற்ற நடவடிக்கையால், தற்போது நடைபெற்று வரும் பொது சுகாதாரப் பணிகள் பாதிக்கப்படும் என்றும், குறிப்பாக கிராமப்புற சுகாதார சேவைகளில் இதன் தாக்கம் ஏற்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பயிற்சி பணிகளும் பாதிக்கப்படும்

பொது சுகாதாரத்துறை மற்றும் நோய்த்தடுப்பு பிரிவில் புதிதாக நியமிக்கப்படும் செவிலியர்களுக்கு வழங்கப்படும் முறையான பயிற்சிகளிலும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர்.
மேற்பார்வை செவிலியர்கள் தங்களது வழக்கமான பணிகளுடன் கூடுதல் பொறுப்புகளையும் ஏற்று செயல்பட்டு வருவதாகவும், பலர் தினமும் 10 முதல் 15 மணி நேரம் வரை பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தனர்.

மறுபணியமர்த்தல் உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை

இதுகுறித்து செவிலியர்கள் மேலும் கூறுகையில், “பொது சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால், தற்போது பணியாற்றி வரும் மேற்பார்வை செவிலியர்களின் சேவை அதே துறையில் தொடர வேண்டும். அவர்களை அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றும் நடவடிக்கை காரணமாக, கிராமப்புற சுகாதார சேவைகள், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தாய்-சேய் நலத் திட்டங்கள் பாதிக்கப்படும்.

எனவே, மறுபணியமர்த்தும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற்று, பொது சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். தஞ்சையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கம், பொது சுகாதாரத்துறை செவிலியர்களிடையே நிலவி வரும் அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu