தூத்துக்குடி அருகே நிகழ்ந்த கொலைச்சம்பவத்தை சுட்டிக்காட்டி தவெக அரசை திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
"சிங்கப் பெண்படை எங்கே போய் தூங்கிக்கொண்டிருக்கிறது?"
தூத்துக்குடி மாவட்டம் வேதமாணிக்கபுரத்தில் 11-ஆம் வகுப்பு மாணவி வீடு புகுந்து குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்களுக்கு எங்கும் பாதுகாப்பில்லை எனும் மோசமான சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது தரங்கெட்ட தவெக அரசு என சாடியுள்ள கனிமொழி, வீடு புகுந்து பெண்கள் தாக்கப்படுவதும் கொல்லப்படுவதும் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருப்பதாகவும் சிங்கப் பெண் அதிரடிப்படை எங்கே போய்த் தூங்கிக்கொண்டிருக்கிறது? எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண்களின் பாதுகாப்பு குறித்து வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் விஜய், இந்தச் சம்பவங்கள் கொஞ்சம் கூட உங்களை உறுத்தவில்லையா? எனவும் வினவியுள்ளார்.
டி.ஆர்.பி.ராஜா கண்டனம்
இதேபோல் தவெக அரசை விமர்சித்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விளைந்த பயிரைக் கருகாமல் காப்பாற்றத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் உள்ளதாகவும், இதைவிட ஒரு டெல்டா விவசாயிக்கு வேறென்ன கொடுமை வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேட்டூர் அணையிலும் தண்ணீர் இல்லாதது மற்றும் பருவ மழையும் பெய்யாதது குறித்து அரசுக்கு கொஞ்சம் கூட அக்கறையும் இல்லை என விமர்சித்துள்ள டி.ஆர்.பி ராஜா வறட்சிப் பாதிப்பைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
Author : விவேக் தங்கராஜ்

