சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானைத் தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி வருகின்றனர். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினந்தோறும் பக்தர்கள் அதிகமானோர் வருவதுண்டு. தமிழகத்தில் அதிகமான வருவாய் தரக்கூடிய ஒரே கோயில் பழனி முருகன் கோயில்.
சித்ரா பவுர்ணமி தினத்தில், அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனிக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். கோடை விடுமுறை மற்றும் பவுர்ணமி தினம் ஒன்றாக இணைந்து வந்ததால், நேற்று அதிகாலையிலேயே பழனியில் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. அதனை தொடந்து இடும்பன் குளம் மற்றும் சண்முக நதியில் நீராடிய பக்தர்கள், மலைக்கோயிலுக்குச் செல்ல கிரிவீதி மற்றும் சன்னதி வீதிகளில் குவியத் தொடங்கினர்.
பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகள் அனைத்தும் நீண்டிருந்தன. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானைத் தரிசித்தனர். கடும் வெயிலின் தாக்கத்தைத் தணிக்கக் கோயில் நிர்வாகம் சார்பில் வரிசையில் நின்ற பக்தர்களுக்குக் குடிநீர் மற்றும் மோர் வழங்கப்பட்டது. ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயில் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், அங்கும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தக் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனை தொடந்து இரவு மலைக்கோயிலில் விசேஷத் தங்கத் தேர் உலா நடைபெற்றது. இதற்காகச் சின்னக்குமாரசாமி தம்பதி சமேதராகப் பலவகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுத் தங்கத் தேரில் எழுந்தருளினார். பௌர்ணமி நிலவின் ஒளியில் தங்கம் மின்ன, மேளதாளங்கள் முழங்கத் தேர் புறப்பட்டது.மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் தேர் வலம் வந்தபோது, அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "முருகா... முருகா..." மற்றும் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என எழுப்பிய கோஷம் விண்ணைப் பிளந்தது.
சித்ரா பவுர்ணமி அன்று தங்கத் தேரைத் தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காகக் கூடுதல் மின்விளக்கு வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மலைக்கோயிலில் நடைபெற்ற இந்தத் தங்கத் தேர் உலா பக்தர்களுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.
Author : நாகராஜ்

