Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தலையில் குடம் சிக்கி பரிதவித்த தெருநாய்... மணப்பாறையில் தீயணைப்பு வீரர்களின் மனிதநேய மீட்பு!

தலையில் குடம் சிக்கி பரிதவித்த தெருநாய்... மணப்பாறையில் தீயணைப்பு வீரர்களின் மனிதநேய மீட்பு!

ABP Nadu 1 day ago

ணப்பாறை: மணப்பாறையில் தலையில் சில்வர் குடம் சிக்கிய நிலையில் பரிதவித்த தெருநாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தண்ணீர் குடிக்க முயன்றபோது சில்வர் குடத்தில் தலை சிக்கிக்கொண்டு பரிதவித்த தெருநாயை, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பாதுகாப்பாக மீட்ட சம்பவம் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வெள்ளைபூலாம்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றது. அப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்த தெருநாய் ஒன்று, வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த சில்வர் குடத்தில் இருந்த தண்ணீரை குடிக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அதன் தலை குடத்திற்குள் சிக்கிக்கொண்டது.

பதற்றத்தில் பரிதவித்து அங்கும் இங்கும் ஓடிய நாய்

தலை முழுவதுமாக குடத்திற்குள் சிக்கியதால் வெளியே எடுக்க முடியாமல் நாய் பரிதவித்தது. கண் பார்வை மறைந்த நிலையில், பதற்றமடைந்த அந்த நாய் அங்கும் இங்கும் வேகமாக ஓடியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் நாயை அமைதிப்படுத்தி குடத்தை அகற்ற முயன்றனர். ஆனால், குடம் இறுக்கமாக சிக்கியிருந்ததால் அவர்களால் அதை அகற்ற முடியவில்லை.

தீயணைப்புத் துறைக்கு தகவல்

இதையடுத்து பொதுமக்கள் உடனடியாக மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதலில் நாயை பாதுகாப்பாக பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

போராடி வெற்றிகரமாக மீட்பு

பயந்து கொண்டிருந்த நாய் தப்பிக்க முயன்றதால் மீட்புப் பணியில் சற்று சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், அனுபவம் வாய்ந்த தீயணைப்பு வீரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, சிறிது நேர போராட்டத்திற்குப் பிறகு நாயின் தலையில் சிக்கியிருந்த சில்வர் குடத்தை சேதமின்றி அகற்றினர். குடம் அகற்றப்பட்டவுடன் நாய் இயல்பு நிலைக்கு திரும்பி, அங்கிருந்து வேகமாக ஓடிச் சென்றது.

தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு

துரிதமாக செயல்பட்டு, ஒரு வாயில்லா ஜீவனின் உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த மீட்புச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்ததுடன், விலங்குகளின் உயிருக்கும் சம முக்கியத்துவம் அளித்து செயல்படும் தீயணைப்புத் துறையினரின் மனிதநேய பணியை பொதுமக்கள் பாராட்டினர்.

மேலும், வீடுகளின் வெளிப்புறங்களில் தண்ணீர் அல்லது உணவு வைக்கும் போது, இதுபோன்ற பாத்திரங்களில் விலங்குகள் சிக்கிக்கொள்ளாத வகையில் பாதுகாப்புடன் வைக்க வேண்டும் என்றும், ஏதேனும் விலங்குகள் ஆபத்தில் சிக்கினால் உடனடியாக மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் விலங்குகள் தண்ணீர் தேடி அலைகின்றன. தவிக்கும் நேரத்தில் அவசரத்தில் இதுபோன்று நாய் உட்பட விலங்குகள் பாத்திரங்களுக்குள் தலையை விட்டு சிக்கி அவதிக்குள்ளாகின்றன.

நம்மை போல் அதுவும் உயிருள்ள் ஜீவன்கள் என்பதை உணர்ந்து அவற்றை மீட்க வேண்டும். அதுதான் உண்மையான மனிதாபிமானம் என்பதை எப்போதும் மறந்து விடக்கூடாது. சிறிது நேரம் என்றாலும் அந்த நாய் பட்டபாடு அதற்குதானே தெரியும். இதுபோன்ற நேரத்தில் மனிதாபிமான சிந்தனையுடன் மக்கள் செயல்பட்டு தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்ததும் பாராட்டக்கூடிய ஒன்றுதான்.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu