தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் பகல் நேர வெப்பம் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகத்தில் இன்று மழை நிலவரம்
தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக மழைக்கான சூழல் நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையுடன் இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், இடி, மின்னலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு தமிழகத்திற்கு தனிப்பட்ட கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வானிலை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலும் ஏற்படக்கூடும். எனவே பகல் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், பிற்பகல் முதல் மாலை அல்லது இரவு நேரங்களில் வானிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்யக்கூடிய சூழல் உள்ளது.
காஞ்சிபுரத்தில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படலாம். உள்ளூர் முன்னறிவிப்பின்படி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 38 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மழை எப்படி?
செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் இன்று மழைக்கான வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் இடி, மின்னலும் ஏற்படக்கூடும் என IMD முன்னறிவித்துள்ளது.
செங்கல்பட்டு நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மேகக்கூட்டங்கள் அதிகரித்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. தாம்பரம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், திருப்போரூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மழை ஏற்பட்டால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும்.
சென்னையிலும் மழைக்கு வாய்ப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.
வெப்பநிலையும் அதிகரிக்கும்
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. கடலோர தமிழகத்தில் பெரிய மாற்றம் இருக்காது. செப்டம்பர் 1-ஆம் தேதி தமிழகத்தில் மதுரை விமான நிலையத்தில் 40.2 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது.
அடுத்த நாட்களில் மழை நிலவரம்
செப்டம்பர் 3-ஆம் தேதி தமிழகத்தின் சில பகுதிகளில் லேசான மழை தொடரும். செப்டம்பர் 4 முதல் 7-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், தமிழகத்தின் பிற பகுதிகளில் ஆங்காங்கே லேசான மழையும் பெய்யக்கூடும் என ஏழு நாள் முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
Author : கிஷோர்

