தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சமூக விரோதிகளின் மதுக்கூடமாக மாறிய சித்திரக்குடி துணை சுகாதார மையத்தில் உடைந்த ஜன்னல்கள், முடங்கிய குடிநீர் வசதியால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்திரக்குடி கிராமத்தில் கிராமப்புற ஏழை எளிய மக்களின் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்காகப் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணை சுகாதார மையக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த மையத்தின் வாயிலாக சித்திரக்குடி, குணமங்கலம், கல்விராயன்பேட்டை, வைரப்பெருமாள்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பயன்பெற்று வருகின்றனர். இங்கு மாதத்தின் முதல் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் கிராம சுகாதார செவிலியர் வருகை தந்து பணியாற்றி வருகிறார். மேலும், சிறப்பு முகாம்கள் மற்றும் தடுப்பூசி முகாம்களும் இங்கு தொய்வின்றி நடத்தப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சுவர் இல்லை: இரவு நேரங்களில் அரங்கேறும் அட்டகாசம்
தற்போதைய நிலையில் முறையான பராமரிப்பும், போதிய பாதுகாப்பும் இல்லாத காரணத்தினால், இந்த அரசு சொத்து முற்றிலும் பாழடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் அவல நிலை அரங்கேறி வருகிறது. இந்த துணை சுகாதார மையத்தை சுற்றிலும் பாதுகாப்புச் சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு நுழைவாயில் கதவு (Gate) கட்டப்படாததே தற்போதைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது. பகல் நேரங்களில் அமைதியாகக் காணப்படும் இந்த மருத்துவமனை வளாகம், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் மற்றும் மதுப்பிரியர்களின் புகலிடமாக மாறிவிடுகிறது. எவ்வித தடையுமின்றி வளாகத்திற்குள் நுழையும் நபர்கள், இப்பகுதியை ஒரு திறந்தவெளி மதுபானக் கூடமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு சொத்துக்கள் சேதம்: உடைந்த ஜன்னல்கள், முடங்கிய உள்கட்டமைப்பு
மதுபோதையில் ஆட்டம்போடும் சமூக விரோதிகள், பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த புதிய கட்டிடத்தின் சொத்துக்களை மிகக் கொடூரமாகச் சேதப்படுத்தி உள்ளனர். கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் கல்வீசித் தகர்க்கப்பட்டுள்ளன. வளாகம் முழுவதும் காலி மதுப் பாட்டில்களும், கண்ணாடித் துண்டுகளும் சிதறிக் கிடக்கின்றன. மேலும், நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காகக் கட்டிடத்தின் கூரையில் வாட்டர் டேங்க் பொருத்தப்பட்டிருந்தும், அதற்குத் தேவையான தண்ணீர் இணைப்பு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்கட்டமைப்புகள் அனைத்தும் எவ்விதப் பயனுமின்றி முடங்கிக் கிடக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த வாட்டர் டேங்கின் வெளிப்புறத்தில் இருந்த பைப்பையும் மர்மநபர்கள் உடைத்துச் சென்றுள்ளனர்.
ஆக்கிரமிக்கப்படும் வளாகம்: வேதனையில் கிராம மக்கள்
இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், "எங்கள் கிராமத்து மக்கள் அவசர மருத்துவத் தேவைகளுக்குப் பல கிலோமீட்டர் தூரம் பயணிப்பதைத் தவிர்க்கவே இந்த மையம் கொண்டு வரப்பட்டது. ஆனால், திறப்பு விழா கண்டு சில காலத்திலேயே இது சமூக விரோதிகளின் ஆதிக்கத்திற்குச் சென்றுவிட்டது. காலையில் பார்த்தால் மருத்துவமனை வளாகம் முழுவதும் மது பாட்டில்களே கிடக்கின்றன. மேலும், முறையான வேலி இல்லாததால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உள்ளே புகுந்து வளாகத்தை அசுத்தப்படுத்துகின்றன. தண்ணீர் வசதியும் இல்லாததால் இந்த மையத்திற்கு வரும் செவிலியர்களும், ஊழியர்களும் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்" என அடுக்கடுக்கான புகார்களை முன்வைக்கின்றனர். மேலும் அறுவடை நேரத்தில், இந்த வளாகத்தைச் சுற்றுச்சுவர் இல்லாததால் அறுவடை இயந்திரங்களை நிறுத்தி தரை தளத்தை மிகவும் கேவலமாக மாற்றி வைத்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை: மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த மக்கள் நலக் கட்டிடத்தைப் பாதுகாக்கவும், கிராமப்புற மருத்துவச் சேவையைச் சீரமைக்கவும், மாவட்ட நிர்வாகமும் மக்கள் நல்வாழ்வுத்துறையும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சித்திரக்குடி துணை சுகாதார மையத்தைச் சுற்றி உடனடியாகப் பலத்த பாதுகாப்புடன் கூடிய உயர்தர சுற்றுச்சுவர் மற்றும் இரும்பு நுழைவாயில் கதவு அமைத்துத் தர வேண்டும். மொட்டை மாடியில் உள்ள வாட்டர் டேங்கிற்கு உடனடியாகத் தண்ணீர் இணைப்பை வழங்கி, இந்த மையத்தை முழுமையான பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதைத் தடுத்து, ஏழை எளிய மக்களின் உயிரைக் காக்கும் இந்த மருத்துவ மையத்தை மீட்டெடுக்கத் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
Author : என்.நாகராஜன்

