Dailyhunt
தஞ்சாவூர் வல்லம் குப்பை கிடங்கில் அதிசயம்! ரூ.1.05 கோடி நிதி: வளம் மீட்பு பூங்காவின் அசத்தல் செயல்பாடு!

தஞ்சாவூர் வல்லம் குப்பை கிடங்கில் அதிசயம்! ரூ.1.05 கோடி நிதி: வளம் மீட்பு பூங்காவின் அசத்தல் செயல்பாடு!

ABP Nadu 2 weeks ago

ஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வல்லத்தில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்கா மேம்பாட்டிற்காக தமிழக அரசு ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதியில் இந்த வளம் மீட்பு பூங்கா இன்னும் வளம் பெற்றுள்ளது. திராவிட மாடல் தமிழக அரசு ஒதுக்கும் நிதிகளை மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி முன்மாதிரி பேரூராட்சியாக வல்லம் பேரூராட்சி அனைவரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது வல்லம் தேர்வுநிலை பேரூராட்சி. இங்கு 15 வார்டுகள் உள்ளன. வல்லத்தை சுற்றி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் என ஏராளமாக உள்ளது. எந்நேரமும் போக்குவரத்து நிறைந்த பகுதி வல்லம் என்றால் மிகையில்லை. இப்பேரூராட்சியில் 4743 குடியிருப்பு வீடுகளும் 480 வணிக கட்டிடங்களும் உள்ளது. தினமும் இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வார்டு 12ல் அமைந்துள்ள அய்யனார் நகர் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

குப்பைககள் சேகரிக்கப்படும் இடம் என்றாலே அனைவரும் மூக்கை பொத்திக் கொள்வார்கள். ஆனால் ;இந்த குப்பைக்கிடங்கிற்கு வளம் மீட்பு பூங்கா என்று பெயர். இந்த பெயருக்கு பொருத்தமானதுதான் இந்த இடம் என்றால் ஆச்சரியம்தான். எந்த வித துர்நாற்றமும் கிடையாது. பிக்னிக்கிற்காக செல்லும் பகுதியில் உள்ள பூங்கா போன்று இருக்கிறது. 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த வளம் மீட்பு பூங்கா கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்த போது அமைக்கப்பட்டது. சிறந்த செயல்பாட்டால் விருதையும் தட்டிச்சென்றது.

அப்போது இருந்து தற்போது வரை குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு என்று யார் இதை கூறினாலும் நம்ப முடியாத அளவிற்கு அருமையான செயல்பாட்டை கொண்டு விளங்கி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மிகவும் சிறப்பான செயல்பாடுகளால் மாவட்ட அளவில் மட்டுமின்றி மாநில அளவில் வல்லம் பேரூராட்சி வள மீட்பு பூங்கா முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.

இங்கு தினசரி சேகரமாகும் குப்பையின் அளவு 4.23 டன். அதில் 2.54 டன் மக்கும் குப்பையும் 1.04 டன் மக்காத குப்பையும் 0.65 டன் வடிகால் மண் சேகரம் செய்யப்படுகிறது. தினமும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் மூலம் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் திடக்கழிவுகளை உரப்படுக்கை அமைக்கப்பட்டு அதில் EM Solution தெளிக்கப்பட்டு 15 நாட்களுக்கு ஒருமுறை உரப்படுக்கை மாற்றி அமைக்கப்படுகிறது. மூன்று முறை இதுபோல் மாற்றி அமைக்கப்பட்டு 45 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகள் சலிக்கப்படுகின்றன.

அருமையான இயற்கை உரம் தயார் ஆகிவிடுகிறது. இரசாயன உரங்களால் நிலத்தின் தன்மை மாறுபட்டு நிற்கும் இந்த காலத்தில் இதுபோன்ற இயற்கை உரங்கள் விவசாயிகளுக்கு வரப்பிரசாதம். அதுமட்டுமல்ல இந்த இயற்கை உரங்களை மிகக் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் 30 நாட்கள் பிறகு மக்கிய திடக்கழிவுகளை மண்புழு உர தொட்டிற்கு மாற்றப்பட்டு அதில் மென்மையான காய்கறி மற்றும் பழங்களின் கழிவுகள் தெளிக்கப்பட்டு 15 நாட்கள் பிறகு மண்புழுவின் கழிவுகள் மேல்தளத்தில் உள்ளதை சேகரம் செய்து மண்புழு உரமாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வளம் மீட்பு பூங்காவில் தேக்கு, மூங்கில், கொய்யா, பலா, வாழை மரங்கள் இயற்கை உரம் தெளிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. காய்கறி செடிகளும் உள்ளன. மூலிகை செடிகளும் நிரம்பி உள்ளது. இதேபோல் மக்காத திடக்கழிவுகளில் நெகிழி, பேப்பர், அட்டைகள், கண்ணாடி பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள் ஆகிய மறுசுழற்சி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு சுயஉதவி குழு பணியாளர்களுக்கு தொகை பிரித்து வழங்கப்படுகிறது. மாடுகள், குதிரைகள், கோழிகள், வாத்துகள் மற்றும் முயல்கள் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மீன்கள் வளர்க்க குளம் அமைக்கப்பட்டு பேரூராட்சி பகுதியில் சேகரமாகும் கோழி கழிவுகள் மீன்களுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

இப்படி அனைத்து விதத்திலும் குப்பைகளை பயன் உள்ளதாக மாற்றி வளமான வளம் மீட்பு பூங்கா வல்லத்தில் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இங்கு பயிற்சி பெறவும் மாணவர்கள் வருகின்றனர். இந்நிலையில் இந்த வளம் மீட்பு பூங்காவின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேலும் பல்வேறு சிறப்பான பணிகள் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம் மற்றும் செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், இந்த வளம் மீட்பு பூங்காவின் செயல்பாடு அனைவரின் பாராட்டுக்களையும் குவித்து வருகிறது. தமிழக அரசு பேரூராட்சியின் அனைத்து ஊழியர்களின் கடினமான உழைப்பால் வல்லம் பேராட்சி திடக்கழிவு மேலாண்மையில் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறது. இந்த பேரூராட்சியில் தமிழக அரசு பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியை தஞ்சை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர் வழிகாட்டுதலின் பேரில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிகள் மேலும் சிறப்பாக செயல்படுத்த முனைப்புடன் பணியாற்றி வருகிறோம் என்றனர்.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu