Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது

தஞ்சாவூரில் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர், இடைத்தரகர் கைது

ABP Nadu 2 weeks ago

ஞ்சாவூர்: தஞ்சாவூரில் கோயில் திருப்பணிக்கான நிர்வாக அனுமதி வழங்குவதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய, இந்து சமய அறநிலையத் துறை தஞ்சாவூர் மண்டல இணை ஆணையர் மற்றும் அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட பெண்ணை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான வன்மீகநாதர் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மதியழகன் மேற்கொண்டு வருகிறார்.

திருப்பணி தொடர்பான அனுமதி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்காக தஞ்சாவூர் மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் மு. ஜோதிலட்சுமி ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டதாக மதியழகன் குற்றம்சாட்டினார். லஞ்சம் வழங்க விருப்பமில்லாத அவர், தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து, துணைக் கண்காணிப்பாளர் அன்பரசன் தலைமையிலான ஊழல் தடுப்பு காவல்துறையினர் நேற்று மாலை தஞ்சாவூர் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் மறைந்திருந்து கண்காணிப்பு மேற்கொண்டனர்.

அப்போது, புகார்தாரர் மதியழகன் ரூ.1 லட்சத்தை அலுவலகத்திற்கு கொண்டு வந்தார். அந்தத் தொகையை இணை ஆணையர் ஜோதிலட்சுமியின் தோழியும், இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிரிஜா என்பவர் பெற்றதாக ஊழல் தடுப்பு காவல்துறையினர் தெரிவித்தனர். உடனடியாக இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, இணை ஆணையர் அலுவலகத்தில் இரவு வெகுநேரம் வரை முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை, பிலோமினா நகரில் உள்ள ஜோதிலட்சுமியின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டு, வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author : என்.நாகராஜன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu