Dailyhunt
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!

தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!

ABP Nadu 1 week ago

சென்னை: தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்றும், நாளையும் (ஏப்ரல் 3, 4) தென்னிந்தியாவில் தீவிரப் பயணம் மேற்கொள்கிறார்.

புதுச்சேரியில் ரோடு ஷோ

இன்று மாலை தனி விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குச் செல்கிறார். அங்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரம்மாண்ட 'ரோடு ஷோ' (வாகனப் பேரணி) நடத்துகிறார்.

பாதை: அஜந்தா சிக்னல் சந்திப்பில் தொடங்கி அண்ணா சாலை, அண்ணா திடல் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகப் பிரதமரின் வாகனப் பேரணி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரதமர் உரையாற்றுகிறார்.

சென்னையில் முக்கிய ஆலோசனை

புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு இன்று இரவு மீண்டும் சென்னை திரும்பும் பிரதமர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்குகிறார். அப்போது, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி நிலவரங்கள், தேர்தல் வியூகங்கள் மற்றும் இறுதிக்கட்டப் பிரச்சாரத் திட்டங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை கேரளா பயணம்

சென்னையில் தங்கும் பிரதமர், நாளை (சனிக்கிழமை) காலை கேரளாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். அங்கு பல்வேறு தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.

பாதுகாப்பு வளையத்தில் சென்னை

பிரதமரின் வருகையை முன்னிட்டுச் சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, சென்னை மாநகரம் முழுவதும் சுமார் 3,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காகக் கிண்டி, மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்: கிண்டி மற்றும் அண்ணா சாலைப் பகுதிகளில் போக்குவரத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிரதமரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author : சிவரஞ்சித்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu