Dailyhunt
Tirumavalavan: "நான் தேர்தலில் போட்டியிடவில்லை" - திருமாவளவன் அந்தர் பல்டி -  அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?

Tirumavalavan: "நான் தேர்தலில் போட்டியிடவில்லை" - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?

ABP Nadu 5 days ago

ரும் சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த விசிக தலைவர் திருமாவளவன், தற்போது போட்டியிடவில்லை திடீர் என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசுகையில், ”சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என நான் விரும்பினேன். ஏற்கெனவே திமுக கூட்டணியில் மங்களூரு தொகுதியில் வென்றவன் நான். பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை. 2006 முதல் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னபோது மறுத்தேன். வென்றாலும் தோற்றாலும் தனிச் சின்னத்தில்தான் போட்டி என்பதில் உறுதியாக இருந்தேன். 2021 தேர்தலிலேயே எம்பி பதவியை துறந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்தது. நடைபெறப்போவது வழக்கமான தேர்தல் அல்ல. வலதுசாரிகள் திட்டமிட்டு பல்வேறு சதிகளைச் செய்தார்கள். எந்த ஆசைவார்த்தைக்கும் எந்த தூண்டுதலுக்கும் ஆளாகாமல் திமுக கூட்டணியை வலுவாக்கினேன். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை 1999ஆம் ஆண்டே முழங்கியவ்நான். இந்த முறை கூட்டணி ஆட்சி பற்றி பேசமாட்டோம் என திட்டவட்டமாக கூறிவிட்டோம். திமுகவுக்கு ஆதரவாக என் நிலைப்பாட்டைத்தான் சட்டப்பேரவையில் விசிக எம்எல்ஏக்கள் முன்வைத்தனர்.

எம்எல்ஏக்களுடன் கருத்து வேறுபாடா?

மூன்று எம்எல்ஏவுக்கு வாய்ப்பளிக்காதது குறித்து என் மீது அவதூறு பரப்புகின்றனர். நான் பேசாத எதையும் சட்டப்பேரவையில் விசிக எம்எல்ஏக்கள் முன்வைக்கவில்லை. விசிக எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு நான் போட்டியிட வேண்டும் என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதிகளில் போட்டியிட 150 பேர் விருப்பம் தெரிவித்தனர். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்கெனவே இருந்தவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. திமுகவுக்கு ஆதரவாக இருந்ததால் 3 எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று அவதூறு பரப்புகின்றனர்.

எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. என்னை கட்டாயப்படுத்தி ஒரு வேலையை யாராலும் செய்ய வைக்க முடியாது. உள்நோக்கத்தோடு சட்டப்பேரவைக்குள் செல்ல திருமாவளவன் நினைக்கிறார் என கட்டுக்கதையை பரப்பினார்கள். திமுக கூட்டணியின் நலனை பாதிக்கும் வகையில் திட்டமிட்டு கருத்து பரப்பப்படுகிறது. முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று நான் இருக்கமாட்டேன். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்ததை வைத்து எனது அரசியலேயே கொச்சைப்படுத்துகிறார்கள். பதவி ஆசை இருந்திருந்தால் 2006இல் சட்டமன்றத் தேர்தலில் நின்றிருப்பேன்” என்றார்.

நான் போட்டியிடவில்லை

வரும் சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிடவில்லை என்றும் அந்த தொகுதியில் விசிக வேட்பாளராக ஜோதிமணி போட்டியிடுவார் என்றும் திருமாவளவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்பியுமான எல்.இளையபெருமாள் மகன் ஜோதிமணி ஆவார்.

Author : ராஜேஷ். எஸ்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu