Dailyhunt
TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி

TN Election 2026: பெரம்பூரையே கண்டுக்காத விஜய்? களத்தில் காணாமல் போகும் TVK? வேகமெடுக்கும் எதிர்க்கட்சி

ABP Nadu 2 weeks ago

TN Election 2026: தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பெரம்பூர் தொகுதியிலேயே போட்டியிடும் பாமகவின் திலகபாமா, பிரத்யேகமாக சில வாக்குறுகளை வெளியிட்டுள்ளார்.

பெரம்பூர் தொகுதி - சுணக்கம் காட்டும் விஜய்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி போட்டியிடும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி என பல நட்சத்திர தொகுதிகள் உள்ளன. அவற்றை எல்லாம் தாண்டி கட்சி தொடங்கிய பிறகு முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள, தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதி மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்த நாளன்றே பெரம்பூரில் பரப்புரை மேற்கொண்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தினார். ஆனால், அதன் பிறகு அந்த தொகுதி பக்கமே அவர் சென்றதாக செல்லவில்லை. கட்சிக்கு வலுவான கட்டமைப்பு இல்லாத நிலையில், நிர்வாகிகளின் களப்பணி எப்படி இருக்கும் என்பதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை.

விஜயை ஓவர்டேக் செய்யும் திலகபாமா..

விஜய் மட்டுமின்றி, ஆளுங்கட்சி சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏவான ஆர்.டி. சேகரை எதிர்த்து, அதிமுக கூட்டணி சார்பில் பாமக பொருளாளரான திலகபாமா பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஏற்கனவே அன்புமணி அங்கு பரப்புரையில் ஈடுபட்டு இருந்தார். இதையடுத்து வீதி வீதியாக சென்று தேர்தல் வாக்கு சேகரிக்கும் பணிகளை தொடங்கியுள்ள திலகபாமா, ”என் மக்கள் என் வாக்குறுதிகள் - 25” என்ற பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் பெரம்பூர் தொகுதிகளுக்கு என சில பிரத்யேகமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

பெரம்பூர் பிரச்னைகளுக்கு தீர்வு?

திலகபாமா வெளியிட்டுள்ள பட்டியலில், “பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை, பெரம்பூரின் பெரும் சாபக்கேடாக இருக்கும் கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் அகற்ற முக்கியத்துவம், மழைநீர் தேங்குவதைத் தடுக்கவும், கழிவுநீர் கலப்பதைத் தவிர்க்கவும் தனி கால்வாய் திட்டங்கள், 24 மணி நேர அரசு பன்னோக்கு மருத்துவமனை மற்றும் மெட்ரோ மினி பஸ் இணைப்பு வசதி உள்ளிட்ட 10 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அடித்தட்டு மற்றும் சாமானிய மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளுக்கான தீர்வுகளாக திலகபாமா கொடுத்துள்ள வாக்குறுதிகள் பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன.

விஜய் வேகமெடுப்பாரா?

வலுவான கட்டமைப்பு கொண்ட அதிமுக மற்றும் திமுக கூட்டணிகளின் வேகத்தை உணர்ந்து இனியாவது, தேர்தல் பரப்புரையில் வேகம் காட்டினால் மட்டுமே விஜயின் சட்டமன்ற கனவு என்பது பலிக்கும். இல்லையெனில் அரசியல் கட்சி தொடங்கிய பத்தோடு பதினோறாவது நடிகராகவே விஜயும் மாறிவிடுவார். எனவே, எதிர்வரும் நாட்களில் விஜய் கள அரசியலில் தீவிரம் காட்டுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu