கருணாநிதி மறைவின்போது அவருக்கு மெரினாவில் இடம் வழங்காதது குறித்த மு.க.ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
கருணாநிதி நினைவிடம் - காரசார விவாதம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்படியாக ஒரு நிகழ்வில் பேசிய இபிஎஸ், கருணாநிதி வீட்டுச்சிறையில் இருந்ததாக கூறினார். மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருநெல்வேலி நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் கருணாநிதி ஐந்துமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராக இருந்தவர். தமிழ்நாட்டின் நீண்ட காலம் ஆண்ட ஒரே முதலமைச்சர். அவருடைய கடைசி ஆசை அண்ணாவிற்கு அருகே தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதாக இருந்தது. அதற்காக நான் மெரினா கடற்கரையில் இடம் கொடுங்கள் என வந்து உங்கள் வீட்டு படியேறி வந்து கையெடுத்து கும்பிட்டு கேட்டேன். ஆனால் இரக்கம் இல்லாமல் மறுத்தவர் தானே நீங்கள். நாக்கில் நரம்பில்லாமல் பேச வேண்டாம் என கடுமையாக விமர்சித்தார்.
கருணாநிதி போட்ட தீர்மானம்
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தேர்தல் பரப்புரையில் இந்த குற்றச்சாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். அதாவது கருணாநிதி மறைவுற்றபோது மெரினாவில் அவரது உடலை நல்லடக்கம் செய்ய இடம் வேண்டும் என கேட்டார். நான் அப்போது முதலமைச்சராக இருந்த நிலையில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்தினேன். இதே கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி முதலமைச்சராக கொஞ்ச நாள் பதவி வகித்த நிலையில் இறந்தார். அவரது உடலை எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்ய அதிமுக சார்பில் அனுமதி கேட்டோம்.
ஆனால் கருணாநிதி அனுமதி மறுத்தார். முதலமைச்சராக இருந்து இறந்தால் தான் மெரினாவில் இடம் கிடைக்கும் என காரணம் சொன்னார். ஜானகி ராமச்சந்திரன் முன்னாள் முதலமைச்சர். அவருக்கு ராமாபுரம் தோட்டத்தில் சொந்த நிலம் உள்ளது. அதில் நல்லடக்கம் செய்யுங்க. காவல்துறை சார்பில் அரசு மரியாதை செய்யப்படும் என அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள்.
அதற்கு முன்னாள் காமராஜரும் முதலமைச்சராக இருந்து மறைந்தவர். அவர் எந்த கட்சிக்காரராக இருந்தாலும் அனைத்து கட்சியினராலும் மதிக்கப்படுவர். காமராஜர் இறந்தபோதும் மெரினாவில் இடம் கேட்கப்பட்டது. அப்போதும் கருணாநிதி மறுத்தார். கிண்டியில் நல்லடக்கம் செய்ய இடம் கொடுத்தார். அப்படி பார்த்தால் கருணாநிதி மறைவுற்றபோது அவர் முன்னாள் முதலமைச்சராக தான் இருந்தார். அவர் ஆட்சிக்காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களுக்கு ஒரு நியாயம்.. மு.க.ஸ்டாலின் அப்பா கருணாநிதிக்கு ஒரு நியாயமா?. இதே கருணாநிதி தான் முன்னாள் முதலமைச்சர்களுக்கு மெரினாவில் இடம் கிடையாது என சொன்னார். அதை சுட்டிக்காட்டி தான் நானும் சொன்னேன். கிண்டியில் நிலம் கொடுத்தேன். அவர்கள் நீதிமன்றத்துக்கு சென்றார்கள்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Author : பேச்சி ஆவுடையப்பன்

