Dailyhunt
TN Election 2026: 'வாய் கொழுப்பெடுத்து பேசினால் மக்கள் ஆதரவு இருக்காது' - இபிஎஸ்க்கு ஸ்டாலின் பதிலடி!

TN Election 2026: 'வாய் கொழுப்பெடுத்து பேசினால் மக்கள் ஆதரவு இருக்காது' - இபிஎஸ்க்கு ஸ்டாலின் பதிலடி!

ABP Nadu 6 days ago

வாய் கொழுப்பெடுத்து பேசினால் யாரையும் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அங்குள்ள தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார்.

அப்போது, “கன்னியாகுமரி மாவட்டத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்த்த நீங்கள் தயாரா என்ற கேள்வி எழுப்ப கூடியிருந்த மக்களும் தொண்டர்களும் தயார் என உற்சாகமாக பேசினர். தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், “திருவாரூர், திருச்சி, கரூர், ஈரோடு கோவை, நெல்லை ஆகிய ஊர்களில் பிரசாரம் முடித்து விட்டு தான் நான் இங்கு வந்தேன். அந்த ஊர் மக்கள் எல்லாம் தயாராகி விட்டார்கள். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி திமுக ஆட்சியமைக்க வேண்டுமென்றால் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். குமரி மாவட்டம் மீனவ நண்பர்கள் நிறைந்துள்ள மாவட்டம்.

மீன் பிடித்தல் என்பது தொழில் கிடையாது. அது வாழ்க்கை முறை. அப்படிப்பட்ட மீனவர்களுக்கு திமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறுபான்மையின மக்களை குறிவைத்து குறிப்பாக கிறிஸ்தவ அமைப்புகளை குறிவைத்து நாடாளுமன்றத்தில் Foreign Contribution (Regulation) Amendment (FCRA) Bill கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் சேவைக்கு வெளிநாட்டில் இருந்து வரும் நிதியை முடக்கும் வண்ணம் இத்திட்டம் உள்ளது. ஆனால் கண் துடைப்புக்காக பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றார். இப்போது இந்த சட்டம் கொண்டு வந்துள்ளார். இதுதான் பிரதமர் மோடியின் உண்மையான முகமாகும்.

இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ அமைப்பு கல்வி மற்றும் மருத்துவம் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. மத்திய அரசு திட்டம் மூலம் நிதியை நிறுத்தினால் உடனடியாக அரசால் அதனை ஏற்று நடத்த முடியாது என நான் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

தேர்தல் நடக்கக்கூடிய கேரளா, அசாம் ஆகிய கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய மாநிலங்களில் பயந்து போய் இந்த சட்டம் கொண்டு வரப்படாமல் உள்ளது. கூடிய விரைவில் கொண்டு வருவார்கள். இந்தியா மேல் உலகளவில் இந்த சட்டம் களங்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த திட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பதை எடப்பாடி பழனிசாமி சொன்னாரா?, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்த அவர், இந்த திட்டம் மூலம் கிறிஸ்தவ மக்களுக்கு துரோகம் செய்ய தயாராகி விட்டார்.

அதிமுக பாஜகவின் கொத்தடிமை கூட்டமாக மாறி விட்டது. தன்னுடைய பதவியை காப்பாற்ற அக்கட்சியை இப்படி ஒரு நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்துள்ளார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பற்றி எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்யக்கூடாது. ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த நாம் அவர் மறைந்த பின் இன்று வரை அரசியல் நாகரீகத்தை கடைபிடித்து வருகிறோம்.

திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்கென யோகம் வந்தது போல இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் இதனை எதிர்பார்க்க முடியுமா சொல்லுங்கள். தமிழ்நாட்டு மக்கள் கொள்கை பேசுபவர்களை தான் ஆதரிப்பார்கள். வாய் கொழுப்பெடுத்து பேசினால் ஆதரிக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமி சொல்வதற்கு சாதனை இல்லை. மக்கள் பட்ட வேதனை தான் இருக்கிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu