TN Election 2026: பெரம்பூரில் பரப்புரையில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி, ஆளும் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
பெரம்பூரில் அன்புமணி பரப்புரை
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ஒட்டி அரசியல் தலைவர்களின் பரப்புரை சூடுபிடித்துள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால், சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் தொகுதி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் நேற்று அந்த தொகுதியில் போட்டியிடும் பாமக பொருளாளர் மட்டுமின்றி ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பாமக தலைவர் அன்புமணி பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது விஜயின் செயல்பாட்களை கடுமையாக சாடினார். மேலும், ஸ்டாலின் தலைமையிலான ஆளுங்கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
பனையூர் வாசலில் நிற்க வேண்டும் - அன்புமணி
பரப்புரையில் பேசுகையில், “தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு, வாக்காளர்கள் ஆதரவளித்து வெற்றி பெற செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் திலகபாமா களத்தில் இறங்கி செயல்படக்கூடிய ஒரு போராளி. ஆனால், நீங்கள் பார்க்க முடியாத, பேச முடியாத, அணுக முடியாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுமா உங்களுக்கு? தவறான நபரை (விஜயை) தேர்வு செய்தால் பனையூரில் வீட்டு வாசலில் நிற்க வேண்டும். திலகபாமாவை தேர்வு செய்தால் அவர் உங்கள் வீட்டு வாசலில் நிற்பார். பெரம்பூர் தொகுதி விஐபி தொகுதி எல்லாம் கிடையாது. சாமானிய தொகுதி.இங்கு வாழக்கூடியவர்கள் சாமானிய மக்கள், அடித்தட்டு மக்கள். இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். சினிமாவில் நடித்தார்கள் வருவார்கள் போவார்கள். இந்த தொகுதியில் போட்டியிடுபவர் (விஜய்) மேடையிலிருந்தே டாடா காட்டுவார். கீழே இறங்கவும் மாட்டார். அப்படிப்பட்ட வேட்பாளர் உங்களுக்கு வேண்டுமா? என சிந்தித்துப் பாருங்கள்” என விஜயின் பெயரை குறிப்பிடாமலேயே அன்புமணி விமர்சித்தார்.
விளம்பரத்தில் மட்டுமே ஸ்டாலின் வருவார்..
தொடர்ந்து திமுகவை விமர்சித்து பேசுகையில், ”ஒருநாள் மழைக்கே சென்னை தாங்குவதில்லை. சென்னை புறநகர் மக்கள் எல்லாம் தங்கள் பாதுகாப்பிற்காக படகை வாங்கி வைத்துள்ளனர். நானும் தருமபுரியில் ஒரு பரிசில் வைத்துள்ளேன். 5 ஆண்டுகால ஆட்சியில் நீங்கள் செய்தது என்ன?திமுகவிடம் நிர்வாக திறமை கிடையாது. தொலைநோக்கு பார்வை மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இல்லை. விளம்பர படத்தில் மட்டுமே ஸ்டாலின் வருகிறார், போகிறார். இது ஏமாற்று வேலை. 30 கூட்டணி கட்சிகளின் பெயரை ஸ்டாலினால் சொல்ல முடியுமா? ஆனால், 30 கட்சிகளின் கூட்டணி என பெருமை பேசுவார். நீங்கள் செய்த பல சாதனைகளை செய்து இருக்கிறீர்களே? தனியாக நிற்கலாமே? அந்த தைரியம் அவர்களுக்கு கிடையாது.
திமுகவில் இருப்பது வியாபாரிகள்..
உழைக்கின்ற மக்கள் அனைவரும் இணைந்து இருப்பது தான் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநயாக கூட்டணி. திமுகவில் இருப்பது எல்லாம் வியாபாரிகள், முதலாளிகள், கார்ப்ரேட் முதலாளிகள். பணக்காரர்கள் மட்டுமே திமுக பக்கம் நிற்கின்றனர். ஆனால், எங்கள் பக்கம் உழைக்கும் வர்கத்தினர் உள்ளனர். எங்களது கூட்டணிக்கு வாய்ப்பு தாருங்கள். உறுதியாக நாங்கள் மாற்றத்தை கொண்டு வருவோம்” என பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
Author : குலசேகரன் முனிரத்தினம்

