அண்ணா பல்கலை மாணவி பாதிக்கப்பட்ட விவகாரத்தில் யார் அந்த சார்? என அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் கண்டுபிடிக்கப்படும் என்று தருமபுரியில் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தருமபுரியில் போட்டியிடும் செளமியா அன்புமணி, பாலகோட்டில் போட்டியிடும் அன்பழகனை ஆதரித்து தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “தருமபுரி அதிமுகவின் கோட்டை கடந்த 2021 தேர்தலில் அதிமுக, பாமக இணைந்து போட்டியிட்டு 100 சதவீதம் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கலாம். ஆனால் தருமபுரிக்கு அதிமுக, பாமகதான் ஆட்சி. 2021 தேர்தலில் இங்கு நாங்கள் வெற்றி பெற்றோம். இந்த பல்வேறு தரப்பு மக்களின் போராட்டங்கள் இருந்திருக்கு. இப்பவும் வெற்றி பெறுவோம்.
சாதாரண பொய் இல்லை, ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய்
ஸ்டாலின் ஈரோட்டில் பேசியது விந்தையாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியால் பொறுத்துக் கொள்ள முடியாமல், பாலியல் புகார் சொல்வதாக கூறுகிறார். இதை நான் சொல்லவில்லை. புள்ளி விவரம் சொல்கிறது. இது அண்ட புழுகு. உங்கள் அரசாங்க புள்ளி விவரத்தின்படி 26,661 பாலியல் வழக்கு, 18000 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6999 வழக்குகள் சிறுமிகள் பாதிக்கப்பட்டதால் பதிவு செய்யப்பட்டது. சாதாரண பொய் இல்லை. ஜமக்காளத்தில் வடிக்கட்டிய பொய். இந்த ஆட்சியில் சிறுமிகள், பெண்கள், வயதான பாட்டிகள் கூட பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை. திமுக அரசு வெளியிட்ட அறிக்கை தான் படிக்கிறேன்.
யார் அந்த சார்? கண்டுபிடிக்கப்படும்
நாம் இதை சொன்னால், பொள்ளாச்சி என பேசுகிறார்கள். பொள்ளாச்சி வழக்கை நியாயமாக விசாரணை செய்ய சிபிஐ வசம் ஒப்படைத்து, விசாரணை செய்யப்பட்டது. அண்ணா நகரில் சிறுமி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்தால், குற்றவாளிகள் தெரியும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் யார் அந்த சார்? இதை அதிமுக ஆட்சி வந்ததும் கண்டறியப்படும். இதை சொன்னால் ஸ்டாலினுக்கு கோவம் பொத்திக்கிட்டு வருகிறது.
நாங்கள் பாஜகவிற்கு அடிமை என ஸ்டாலின் சொல்கிறார். மக்களுக்கு எந்த பிரச்சினைகள் வந்தாலும் போராடுவோம். உங்களை மாதிரி கூஜா தூக்க மாட்டோம். திமுக எதிர்க்கட்சித்தலைவராக இருக்கும்போது, பிரதமர் வந்தால், கருப்பு கொடி காட்டுவார். ஆனால் முதலமைச்சரானதும் பிரதமருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார். இரட்டை வேடம் போடுகிறார் ஸ்டாலின். காவிரி விவகாரத்தில், பாஜக அரசு காலம் தாழ்த்தி வந்தது. ஆனாலும் கூட்டணியில் இருந்தாலும், 37 நாள் நாடாளுமன்றத்தை முடக்கி, தீர்வு கண்டோம். அது எங்களால் முடியும். திமுகவால் முடியுமா?
கடந்த 2021 தேர்தலில் ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி சொன்னார். எதையும் செய்யும் செய்யவில்லை. நீட் விலக்கிற்கு திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் குரல் கொடுக்கவில்லை. பென்ச்சை தேய்த்து கொண்டிருந்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
Author : ராஜேஷ். எஸ்

