Dailyhunt
TN Election BJP Defeat: 35 தொகுதியில் 34-ல் கருகிய தாமரை.! வீழ்ச்சியை சந்தித்த பாஜக - காரணம் என்ன.?

TN Election BJP Defeat: 35 தொகுதியில் 34-ல் கருகிய தாமரை.! வீழ்ச்சியை சந்தித்த பாஜக - காரணம் என்ன.?

ABP Nadu 1 week ago

அதிமுகவின் கூட்டணி வியூகம்

மிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், ஆட்சியில் இருந்த திமுக தோல்வியை சந்தித்துள்ளது.

எதிர்கட்சியாக இருந்த அதிமுகவும் படு தோல்வியை எதிர்கொண்டுள்ளது. அந்த வகையில் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். தேசிய கட்சியான பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்த அவர், அடுத்ததாக பாமக மற்றும் அமமுகவை கூட்டணியில் இணைத்தார். பாஜகவிற்கு 27 தொகுதிகளை ஒதுக்கினார். பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது.

35 தொகுதிகளில் பாஜக போட்டி

இதில் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளும், ஐஜேகேவிற்கு 2 தொகுதிகளும், தமமுகவிற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. எனவே இந்த கட்சிகள் எல்லாம் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்டது. எனவே ஒட்டுமொத்தமாக 35 தொகுதிகளில் பாஜகவின் சின்னம் களம் இறங்கியது. கடந்த முறை 4 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை எப்படியாவது இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற வேண்டும் என திட்டமிட்டது. இதற்கு ஏற்றார் போல மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை சவுந்திரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வேட்பாளராக போட்டியிட்டனர். பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மூத்த தலைவர்களை களம் இறக்கிய பாஜக

இதனையடுத்து கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. மீதமுள்ள 34 தொகுதிகளில் பாஜகவின் தாமரை சின்னம் கருகியது. அதிலும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழிசை, வானதி சீனிவாசன் தோல்வி அடைந்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக அதிமுக- பாஜக கூட்டணியில் தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு இல்லாதது.

பாஜக தோல்விக்கு காரணம் என்ன.?

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையின் செயல்பாட்டால் பாஜக தொண்டர்கள் மத்தியில் எழுச்சி இருந்த நிலையில், அதிமுகவுடன் கூட்டணிக்காக அண்ணாமலையை நீக்கி விட்டு நயினார் நாகேந்திரனை தலைவராக நியமித்ததை பாஜக தொண்டர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் தவெகிற்கு ஆதரவாக வாக்களித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் எப்போதும் பாஜக மீதான எதிர்ப்பும் தோல்விக்கு முக்கிய காரணமாக வழிவகுத்துள்ளது. மற்ற மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் பாஜக தமிழகத்தில் தொடர் பின்னடைவை சந்தித்துள்ளதால் தமிழக பாஜக தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu