2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியை தழுவினர்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் தோல்வியை தழுவினர்.
இந்த நிலையில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு இந்த தேர்தல் தோல்வி எதிர்பாராத ஒன்றாக அமைந்திருக்கிறது. அதிலும் அக்கட்சி தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியை தழுவியது ஒட்டுமொத்த அரசியல் வரலாற்றிலும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பவமாக மாறியுள்ளது.
அதுமட்டுமலாமல் தூத்துக்குடியில் கீதா ஜீவன், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கே.ஆர்.பெரிய கருப்பன், திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், மன்னார்குடியில் டிஆர்பி ராஜா, ஆலந்தூரில் தா.மோ.அன்பரசன், காங்கேயத்தில் வெள்ளக்கோவில் சாமிநாதன், ராசிபுரத்தில் மதிவேந்தன், ஆவடி சா.மு.நாசர், சேலம் வடக்கில் ராஜேந்திரன், ராணிப்பேட்டையில் காந்தி, சைதாப்பேட்டையில் மா.சுப்பிரமணியன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன், மதுரை மத்தியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், காட்பாடியில் துரை முருகன், மதுரை கிழக்கில் மூர்த்தி ஆகிய சிட்டிங் அமைச்சர்கள் 16 பேர் தோல்வியடைந்தனர். இதில் பெரும்பாலானோர் தவெக வேட்பாளர்களிடம் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்தனர்.
முன்னாள் அமைச்சர்களும் தோல்வி
இந்த நிலையில் அதிமுக சார்பில் களம் இறங்கிய முன்னாள் அமைச்சர்களும் தோல்வியை தழுவினர். அதன்படி பார்த்தால் திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமார், மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ, திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா, திண்டுக்கலில் சீனிவாசன், கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ, சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி, உடுமலைப்பேட்டையில் ராதாகிருஷ்ணன், மதுரவாயல் பெஞ்சமின், அண்ணாநகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி, கடலூரில் எம்.சி.சம்பத், குமாரப்பாளையத்தில் தங்கமணி, ராயபுரத்தில் ஜெயக்குமார், கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளி தொகுதியிலும் தங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர்.
அதேசமயம் அதிமுகவில் திமுகவுக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், சத்யபாமா, நிர்மல்குமார், லோகேஷ் தமிழ்செல்வன், வி.எஸ்.பாபு, கருப்பையா, ஜேசிடி பிரபாகர் ஆகியோரும் இந்த தேர்தலில் தங்கள் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
Author : பேச்சி ஆவுடையப்பன்