தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறையில் சென்னை மண்டல தலைமை செயற்பொறியாளர் கட்டுபாட்டில் செயல்படும் பாலாறு வடிநில வட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

பாலாறு வடிநில கோட்ட நிதியில் பெரும் முறைகேடு என புகார்
குறிப்பாக, கொசஸ்தலை ஆறு வடிநில கோட்டம் - திருவள்ளூர், கீழ்பாலாறு வடிநில கோட்டம் - காஞ்சிபுரம் மற்றும் ஆரணியாறு வடிநில கோட்டம் - சென்னை கோட்டம் ஆகிய கோட்டங்களில் 2025-26 நிதியாண்டில் AH M & R (Annual Heavy Maintenance & Repairs) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட அரசு பணத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஒதுக்கப்பட்ட 25 கோடி ரூபாயில் ஊழல் என குற்றச்சாட்டு
நிதித்துறையின் மூலம் G.O.(D) எண் 80 மற்றும் 81, தேதி 20.02.2026 மூலம் Demand No.40 - 2702 - 03 - 101 - AH M&R - Periodical Maintenance தலைப்பின் கீழ் நீர்ப்பாசன உட்கட்டமைப்பு பராமரிப்பு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, 27.02.2026 அன்று Engineer-in-Chief மற்றும் Chief Engineer (General) அலுவலகம், மாநிலத்தின் பல பாகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன் பின்னர் 02.03.2026 அன்று சென்னை மண்டல Chief Engineer, தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பிரிவுகளுக்கு நிதியை பகிர்ந்தளித்தார். சென்னை மண்டலத்திற்கு மொத்தமாக ரூ.25.43 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அவை 10 பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது ஏன் ?
ஆனால், இந்த பிரிவு வாரியான ஒதுக்கீடு என்பது ஒருதலைப்பட்சமாக நடைபெற்றதாகவும், சில குறிபிட்ட கோட்டங்களுக்கு மட்டும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் பார்த்தால்,
- ஆரணியாறு கோட்டம் - சுமார் ரூ.3.10 கோடி
- கொசஸ்தலை ஆறு கோட்டம் - சுமார் ரூ.6.40 கோடி
- கீழ்பாலாறு கோட்டம் - சுமார் ரூ.5.20 கோடி
என இந்த மூன்று கோட்டங்களுக்கு மட்டும் சுமார் 14.70 கோடி ரூபாய், அதாவது மொத்த ஒதுக்கீட்டில் பாதிக்கும் மேலான தொகை தரப்பட்டுள்ளது மிகப்பெரிய சந்தேகத்தையும், பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. இதனைப்போன்றே, இந்த பிரிவுகளுக்கு மட்டும் ஏற்கனவே, வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு சுமார் 35 கோடி ரூபாய், முன்பருவமழை பணிகளூக்கு ஒரு 35 கோடி ரூபாய் என மொத்தம் 70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை பின்பற்றாமல் விதிமீறல் ?
குறிப்பாக, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு எந்த நிதி ஒடுதுக்கிடும் செய்யக் கூடாது என்ற விதி இருந்தும் அதனையெல்லாம் மீறி இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை ஊழியர்களே பரபரப்பு புகார்களை மேலிடத்திற்கு அனுப்பி வருகின்றனர். மேலும், Tamil Nadu Transparency in Tenders Act மற்றும் அதற்கான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
குறிப்பாக,
- ரூ.25 லட்சம் கீழ் பணிகளுக்கான District Tender Bulletin அறிவிப்புகள்
- ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான பணிகளுக்கான State Tender Bulletin அறிவிப்புகள் முறையாக வெளியிடப்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், சில பணிகள் திட்டமிட்ட வகையில் துண்டிக்கப்பட்டு (split) டெண்டர் நடைமுறைகளை தவிர்க்கும் வகையில் வழங்கப்பட்டதாகவும் பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- ஒரே பணிகள் இருமுறை பதிவு செய்யப்பட்டதாகவும்
- Measurement Book-களில் அளவுகள் அதிகரித்து பதிவு செய்யப்பட்டதாகவும்
- முழுமையாக செய்யப்படாத பணிகளுக்கும் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாகவும்
- சில சந்தர்ப்பங்களில் பணிகள் செய்யப்படாமலேயே கட்டணங்கள் வழங்கப்பட்டதாகவும் பகீர் கிளப்புகிறார்கள் நீர்வளத்துறை ஊழியர்கள்.
மேலும், இந்த பணிகள் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பும் பின்னரும் மிக குறுகிய காலத்தில் அவசர அவசரமாக செயல்படுத்தப்பட்டிருப்பதால், Measurement Books மற்றும் பிற துறை பதிவுகள் பின்னர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவற்றை உடனடியாக பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
சில ஒப்பந்தத்தாரர்களுக்கு மட்டும் பணிகள் ஒதுக்கியது ஏன் ?
அதே நேரத்தில், லக்ஷ்மிநாராயணா, மணிகண்டன், பிபிஎஸ் பிரபு, வீரப்பன் மற்றும் வெங்கடேச பாபுஆகிய சில ஒப்பந்தத்தாரர்களுக்கு மட்டுமே பெரும்பாலான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதும் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டி இல்லாத ஒப்பந்த வழங்கல் (cartelisation) மற்றும் வெளிப்படைத்தன்மை மீறல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது.
இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்ட கோட்டங்களில்:
- அருள்மொழி - Executive Engineer, கீழ்பாலாறு
- ராதாகிருஷ்ணன் - Executive Engineer, கொசஸ்தலை
- கார்த்திகேயன் - Executive Engineer, ஆரணியாறு ஆகியோர் பொறுப்பில் இருந்ததாகவும், மேற்பார்வை அதிகாரியாக, • செல்வகுமார் - Superintending Engineer மற்றும் • Chief Engineer - சென்னை ஆகியோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியான விசாரணை நடத்த வலியுறுத்தல்
இப்படியான மிகப்பெரிய ஊழல், முறைகேடு புகார் நீர்வளத்துறையில் எழுந்திருக்கும் நிலையில், இது குறித்து உடனடியாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு, தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் Measurement Books, டெண்டர் ஆவணங்கள், பில்லுகள் உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும், காவல்துறை, சிபிஐ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட ஒவ்வொருவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீர்வளத்துறையில் வலுத்துள்ளது.
துறை செயலரின் விளக்கம் என்ன ?
இது தொடர்பாக பல்வேறு துறைகளிலும் மாவட்டங்களிலும் சிறப்பாக செயலாற்றி, தற்போது நீர்வளத்துறை செயலாளராக உள்ள ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, நாம் குறிப்பிட்ட புகார்கள், முறைகேடுகள் குறித்து விசாரிப்பதாகவும், உண்மை நிலவரம் குறித்து விரைவில் பதில் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
Author : இராஜா சண்முகசுந்தரம்

