Dailyhunt
Trump Vs Iran Hormuz: ஹார்முஸ் பிரச்னை ஓய்ந்தது.? 'ப்ராஜெட் ஃப்ரீடம்' திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த ட்ரம்ப்; காரணம் என்ன.?

Trump Vs Iran Hormuz: ஹார்முஸ் பிரச்னை ஓய்ந்தது.? 'ப்ராஜெட் ஃப்ரீடம்' திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்த ட்ரம்ப்; காரணம் என்ன.?

ABP Nadu 1 week ago

த்திய கிழக்கின் மிகவும் பரபரப்பான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், அமெரிக்கா எடுத்த ஒரு முடிவு உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேற்று வரை ஈரானை அழித்துவிடுவதாக அச்சுறுத்தி வந்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது லட்சியமிக்க 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' (Project Freedom) என்ற திட்டத்தை திடீரென நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளார். உலகெங்கிலும் சிக்கித் தவிக்கும் கப்பல்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற பெரும் வாக்குறுதிகளுடன் இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. ட்ரம்பின் இந்த நடவடிக்கை உண்மையிலேயே ஒரு சமாதான முன்னெடுப்பா அல்லது கடலில் மறைந்திருக்கும் ஒரு பெரும் ஆபத்தின் அறிகுறியா.?

3 நாட்களுக்குள் முடிக்கப்பட்ட 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்'

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பால் பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப்பட்ட 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்', வெறும் மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்களை விடுவித்து, அவற்றுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருந்தது. ஆனால், வெள்ளை மாளிகையின் இந்த திடீர் முடிவு, அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் பெரும் முன்னேற்றம் - ட்ரம்ப்

இது குறித்து ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளின் கோரிக்கைகளின் அடிப்படையிலும், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளின் போது அடைந்த மகத்தான வெற்றியின் அடிப்படையிலும், ஈரானுடன் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு விஷயத்தில் பரஸ்பர உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பொருளாதாரத் தடைகள் தொடர்ந்து முழு வீச்சில் அமலில் இருக்கும் அதே சமயம், ஒப்பந்தத்தை இறுதி செய்து கையெழுத்திட முடியுமா இல்லையா என்பதை பார்ப்பதற்காக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை பாதுகாப்பாக இயக்குவதற்கான ‘ப்ராஜெக்ட் ஃப்ரீடம்‘ திட்டத்தை குறுகிய காலத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இனி ஹார்முஸில் வர்த்தகக் கப்பல்கள் பாதுகாப்பாக இருக்குமா.?

ட்ரம்ப் இப்படி கூறினாலும், அவ்வழியாக செல்லும் கப்பல்களுக்கான பிரச்னைகள் தீராது. ஏனென்றால், கப்பல்கள் கடந்து செல்வதற்காக, ஈரான் புதிய மற்றும் கடுமையான முன்-அனுமதி விதிகளை அமல்படுத்தியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஒரு முறையான மற்றும் எழுத்துப்பூர்வமான அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் வரை, எந்தவொரு வர்த்தகக் கப்பலும் அந்தப் பகுதி வழியாகச் செல்வது அபாயகரமானதாகவே இருக்கும்.

அமெரிக்க கடற்படையின் முற்றுகையும் தொடர்கிறது

இதேபோல், அமெரிக்கா 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' என்ற மீட்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தாலும், தனது ராணுவப் பிடியை தளர்த்தவில்லை. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் கடுமையான முற்றுகை தொடர்கிறது. ஈரான் தனது நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறதா என்பதை தாங்கள் கண்காணிப்போம் என்று அமெரிக்கா கூறுகிறது.

இதற்கிடையே, தனது கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்கக் கடற்படை இருப்பது போர் நிறுத்த மீறலாகக் கருதப்படும் என்று ஈரான் தெளிவாக எச்சரித்துள்ளது. கடலில் வெடிமருந்தின் வாசனை இன்னும் நீடிக்கிறது என்பதே நிதர்சனமாக உண்மை.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu