Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?

Trump Warns Oman: ட்ரம்ப்பின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.! ஓமனை தகர்த்துவிடுவேன் என எச்சரிக்கை; எதற்காக தெரியுமா.?

ABP Nadu 1 week ago

ரான் உடனான தொடர்ச்சியான பதற்றங்களுக்கு நடுவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஓமனுக்கு நேரடி எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக பேசிய அவர், அந்த முக்கிய நீர்வழியை எந்த நாடும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, ​​ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளுக்கும் திறந்திருக்க வேண்டும் என்று கூறிய ட்ரம்ப், அதனை "சர்வதேச நீர்நிலைகள்" என்று குறிப்பிட்டு, எந்த ஒரு நாடும் அதன் மீது உரிமை கோர முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன.?

அமைச்சரவை கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்பிடம், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை, ஈரானும், ஓமானும் பகிர்ந்து கொள்ளும் முன்மொழியப்பட்ட அமைப்புக்கு அவர் ஒப்புதல் அளிப்பாரா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், "நாங்கள் அதை கண்காணிப்போம். ஆனால், யாரும் அதை கட்டுப்படுத்த முடியாது. அது எங்கள் கலந்துரையாடல்களின் ஒரு பகுதியாகும்," என்று கூறினார்.

ஓமனுக்கு எச்சரிக்கை

மேலும், ஓமனுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்த ட்ரமப், "அவர்கள் அதை கட்டுப்படுத்த விரும்புகிறார்கள். யாராலும் அதை கட்டுப்படுத்த முடியாது. இது சர்வதேச கடல் பகுதி. ஓமன் மற்ற நாடுகளைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அவர்களை தகர்க்க வேண்டியிருக்கும்" என்று அவர் எச்சரித்தார். இருப்பினும், பின்னர் தனது நிலையை மாற்றி, "அவர்கள் அதை புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் நலமாக இருப்பார்கள்" என்று தெரிவித்தார்.

ஈரான் ஒப்பந்தத்தின் நிலை குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி தெரிவித்துள்ளார். அது குறித்து பேசிய அவர், "ஈரானின் நோக்கங்கள் மிகவும் வலுவானவை. அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அவர்களின் நிபந்தனைகளில் எங்களுக்கு திருப்தி இல்லை, இருப்பினும் நாங்கள் திருப்தி அடைவோம்" என்று கூறினார். மேலும், "ஒன்று, நாம் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும், அல்லது நமது பணியை முடிக்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

அதோடு, "இந்த ஒப்பந்தம் குறைபாடற்றதாக இருக்க வேண்டும். இந்த ஒப்பந்தத்திற்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று ஹார்முஸ் ஜலசந்தி ஆகும். அங்கு எதிர்கால கட்டுப்பாடு நிச்சயமற்றதாக உள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறது," என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஏற்கனவே மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஓமனுக்கும் சேர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதால், பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பிரச்னை முடிவுக்கு வராததால், ஏற்கனவே உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பிரச்னை மேலும் அதிகரித்தால், அது உலக நாடுகளுக்கு எரிபொருள் கிடைப்பதில் இன்னும் சிக்கலை ஏற்படுத்தும். ஏற்கனவே விலைவாசிகள் உயர்ந்து வரும் நிலையில், தற்போது ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை, மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu