தலைமைச் செயலாளர் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதால்தான் தேர்தல் ஆணையம் அவரை மாற்றியுள்ளது என்று திருப்பத்தூரில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
திமுக சூப்பர் ஸ்டார் இல்லை, டம்மி ஸ்டார் என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள, டிடிவி தினகரன் திருப்பத்தூர் வந்தார். தொடர்ந்து அமமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அப்போது பேசியதாவது.
’’திமுக அரசு வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது. திமுக சூப்பர் ஸ்டார் இல்லை, டம்மி ஸ்டார். அரசு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆசிரியர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். தமிழ்நாட்டில் போராடாத அரசுத் துறை அலுவலர்கள்இல்லை.
தமிழகத்தில் கொலை என்பது வழக்கமாகிவிட்டது, தமிழகத்தில் சட்ட ஒழுங்கிற்கு அம்மா ஆட்சி வர வேண்டும், அதற்கு இரட்டை இலையுடன் கூட்டணியில் உள்ள என்டிஏ கூட்டணி வர வேண்டும்,
திமுகவிற்கு மாற்று அதிமுகதான்
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுகவிற்கு மாற்று அதிமுகதான். மற்ற கட்சிகள் போட்டிக்கு வர முடியாது. எமர்ஜென்சியின் போது, திமுகவிற்கு செய்யப்பட்டதை மறந்து, திமுகவினர், யார், யார் காலை பிடித்து வந்தார்கள் என தெரியும். தீயசக்தி திமுகவிடம் இருந்து, தமிழ்நாட்டை மீட்டெடுக்க அதிமுக கூட்டணியால் தான் முடியும்.
தலைமைச்செயலாளர் முருகானந்தம் மாற்றம் செய்யப்பட்டதற்கு, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்பட்டு மாற்றம் செய்துள்ளதாக ஸ்டாலின் தெரிவிக்கிறார்.
ஒருதலைபட்சமாக செயல்பட்டது யார்?
தமிழக தலைமைசெயலாளர் முருகானந்தம் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால்தான், தேர்தல் ஆணையம் அவரை மாற்றியுள்ளது’’
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
Author : க.சே.ரமணி பிரபா தேவி

