தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக் கழகம் தன்னுடைய முதல் தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.
ஆனால், ஆட்சியை அமைப்பதற்கு அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தனிப்பெரும்பான்மை கிடைக்குமா?
தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏ-க்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விஜய் இரண்டில் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய உள்ளதால் இன்னும் 6 தொகுதி எம்எல்ஏ-க்களின் ஆதரவு தவெக-விற்கு தேவைப்படுகிறது.
ஆதரவு தருவார்களா விசிக, கம்யூனிஸ்ட்?
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 கட்சிகளிடமும் தலா 2 என மொத்தம் 6 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.
அரிய வாய்ப்பு:
இவர்கள் ஆதரவு தெரிவித்தால் தமிழக வெற்றிக் கழகத்தினரின் ஆதரவு மொத்தமாக 119-ஆக உயரும். விஜய் எந்தவொரு சிரமும் இன்றி முதலமைச்சராக பொறுப்பேற்பார். தமிழக அரசியலில் கடந்த அரை நூற்றாண்டுகளாக திராவிட கட்சியின் அமைச்சரவை மட்டுமே இருந்து வந்த நிலையில், முதன்முறையாக விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் அமைச்சர்களாகும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் ஒரு அங்கமாகும் வாய்ப்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், தவெக ஆட்சிக்கு விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் நாளை ஆதரவைத் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிர்ச்சியில் திமுக:
திமுக கூட்டணியில் தவிர்க்க முடியாத கட்சியாக இருந்த காங்கிரஸ் ஏற்கனவே வெளியாகிய நிலையில், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளும் வெளியேறும் சூழலால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த கட்சியின் தேர்தல் செலவுகள் உள்ளிட்டவற்றை திமுக-வே மேற்கொண்டாலும், தொகுதி பங்கீட்டிலும் தேர்தல் பணிகளிலும் திமுக-வினர் சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர்.
இந்த சூழலில், திமுக-வின் கூட்டணியை முறியடித்து புதிய பாதையில் மீண்டும் மக்கள் நலக்கூட்டணியினர் அணி சேர உள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினரால் திமுக-வின் பலமான கூட்டணி சுக்கு நூறாக நொறுங்கும் சூழலால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
Kerala CM Race: கேரளாவின் புதிய முதலமைச்சர் யார்? காங்கிரஸில் அதிகாரத்துக்கு மல்லுகட்டு!
Author : சுகுமாறன்

