Dailyhunt
TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!

TVK Aadhav Arjuna: முடிவுக்கு வந்த பிரச்னை.. ஆதவ் அர்ஜூனா வேட்புமனு ஏற்பு.. தொண்டர்கள் ஹேப்பி!

ABP Nadu 1 week ago

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவில் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டு பின் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆதவ் அர்ஜூனா தாக்கல் செய்த சொத்து தொடர்பான பிரமாண பத்திரத்தில் சில தகவல்கள் இடம்பெறவில்லை என சுயேட்சை வேட்பாளர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவரது வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் தீவிர பரிசீலனைக்குப் பின் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நிலவரம்

2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. நடுவில் அரசு விடுமுறை வந்த நிலையிலும் மீதமுள்ள நாட்களில் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக்குழுவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவதற்காக மார்ச் 30ம் தேதி முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆதவ் அர்ஜூனா தீவிர பரப்புரை

தொடர்ந்து அவர் வில்லிவாக்கம் தொகுதியில் காலை 7 மணி முதல் ஒவ்வொரு நாளும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வந்தார். இதனிடையே ஏப்ரல் 6ம் தேதியான நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தம் 7,150 பேர் தேர்தலில் நிற்க வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. முன்னதாக தேர்தலில் போட்டியிடுபவர்கள் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரம் தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது.

ஒவ்வொரு வேட்பாளரும் தெரிவித்திருந்த சொத்து விவரம் தொடங்கி அவர்களின் குற்றப் பின்னணி தகவல் வரை சரமாரியாக விமர்சனம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இன்றைய வேட்புமனுக்கள் பரிசீலனையின்போது சுயேச்சை வேட்பாளர் முரளி வினோத் என்பவர் ஆதவ் அர்ஜூனா தனது பிரமாண பத்திரத்தின் மனைவி பெயரில் உள்ள 35 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிடவில்லை எனவும், அவர் கையிருப்பில் ரூ.2 கோடி வைத்திருப்பதாக கூறினார்.

எனவே அவரது வேட்புமனுவை ஏற்கக் கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் தேர்தல் பார்வையாளர் வரும் வரை ஆதவ் அர்ஜூனா வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தீவிர ஆய்வுக்குப் பின் ஆதவ் அர்ஜூனா மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேசமயம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்மூலம் அவர் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu