Dailyhunt
TVK Cong: "TVK கூட்டணிக்கு ஓகே, ஆனால்" சௌமியாவிற்கு சுகாதாரத்துறை? காங்., எத்தனை அமைச்சர்கள்?

TVK Cong: "TVK கூட்டணிக்கு ஓகே, ஆனால்" சௌமியாவிற்கு சுகாதாரத்துறை? காங்., எத்தனை அமைச்சர்கள்?

ABP Nadu 1 week ago

TVK Cong Alliance: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவையில், காங்கிரஸ் இரண்டு இடங்களை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணியை நாடும் தவெக:

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களை வென்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான கட்சிகளை தவிர்த்து வெளியே, 20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். அவர்களில் 10 பேரின் ஆதரவை திரட்டுவதில் தவெக தரப்பும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தேசிய கட்சியான காங்கிரஸ் தொடங்கி மாநில கட்சிகளான விசிக மற்றும் பாமக போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், விரைவில் கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் பங்களிப்புடன் விஜயின் அமைச்சரவை அமைக்கபப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

”விஜய்க்கு ஆதரவளிக்க ஒகே சொன்ன காங்.,”

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது குறித்து மாநில காங்கிரஸ் நிர்வாகமே முடிவு செய்யும் எனவும், மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே தங்க்ளது விருப்பம்” என்றும் பேசியிருந்தார். தேர்தலுக்கு முன்பே தவெக உடன் கூட்டணி வைக்க விரும்பி கடைசி நேரத்தில் அதனை தவறவிட்ட காங்கிரஸ், தற்போதைய சூழலையாவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுகிறதாம். இந்நிலையில் தான், “அரசு அமைப்பதில் விஜயின் தவெகவிற்கு ஆதரவளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு அரசியல் விவகாரக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது” என காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், இன்று சென்னையில் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில், விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் கேட்கும் 2 அமைச்சர் பதவிகள்:

தவெகவிற்கு ஆதரவு அளிக்க அமைச்சரவையில் தங்களுக்கு இரண்டு இடங்களை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளதாம். இதுபோக எந்த சூழலிலும் அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் தவெக அணி சேரக்கூடாது என்ற நிபந்தனையையும் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விரைவில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பாமகவிற்கு சுகாதாரத்துறை?

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவளிப்பது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஆனால் மேலும் 5 இடங்கள் என்பது அவசியமானதாக உள்ளது. அதற்காக 4 இடங்களில் வெற்றி பெற்ற அன்புமணி தலைமையயிலான பாமகவிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதில், சௌமியா அன்புமணிக்கு சுகாதார அமைச்சர் பேசப்பட்டதாகவும், அதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் பரிசீலித்து வருவதகாவும்கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் காங்கிரஸ் மற்றும் பாமகவிடம் இருந்து தவெகவிற்கு 9 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிடும்.

திமுக கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இதுபோக திமுக கூட்டணியில் இருந்து தேர்தலில் களம் கண்டு தலா இரண்டு இடங்களில் வெற்றி பெற்ற, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடமும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு கோர திட்டமிட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அப்படி ஆதரவு தரும் கட்சிகளுக்கு, அமைச்சரவை மட்டுமின்றி அரசுத்துறையில் பல்வேறு முக்கிய பதவிகள் கொடுப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம்.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu