Dailyhunt
TVK Congress Alliance: தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு.! ஆனா... இந்த நிபந்தனையை மீறக்கூடாது-  வெளியான ஆதரவு கடிதம்

TVK Congress Alliance: தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு.! ஆனா... இந்த நிபந்தனையை மீறக்கூடாது- வெளியான ஆதரவு கடிதம்

ABP Nadu 1 week ago

தவெகவிற்கு காங்கிரஸ் ஆதரவு

மிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து ஆட்சி அமைக்க மேலும் 10 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் ஆதரவை தவெக கேட்டிருந்தது. இதனையடுத்து காங்கிரஸ் மேலிடம் தவெகவிற்கு ஆதரவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் தவெகவிற்கு அளித்துள்ள ஆதரவு கடிதத்தில்,

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. விஜய், தமிழ்நாட்டில் அரசு அமைப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் (INC) கட்சியின் ஆதரவை அதிகாரப்பூர்வமாக கோரியுள்ளார். தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், மதச்சார்பற்ற, முன்னேற்றமான மற்றும் நலன்வாய்ந்த அரசை உருவாக்க வேண்டும் என்ற தெளிவான மற்றும் வலுவான தீர்ப்பை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தையே அடுத்த அரசை அமைக்கத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ், மதச்சார்பற்ற, முன்னேற்ற மற்றும் நலன்வாய்ந்த அரசியலை நிலைநிறுத்தும் அடிப்படை கட்சியாகும்.

தவெகவிற்கு முழுமையான ஆதரவு

ஆகையால், தமிழ்நாட்டு மக்களின் இந்த தீர்ப்பை மதித்து அதை நிறைவேற்ற உதவுவது எங்கள் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் கடமையாகும். இதற்கிணங்க, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் காங்கிரஸ் சட்டமன்றக் குழுவும் (CLP) இணைந்து, தமிழக வெற்றி கழகத்திற்கு அரசு அமைக்க முழுமையான ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளன.

எங்களின் ஆதரவு, இந்திய அரசியலமைப்பை மதிக்காத எந்த மதவாத சக்திகளையும் இந்த கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்படுகிறது. இந்த கூட்டணி, பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் தமிழ்நாட்டு பொற்காலத்தை மீண்டும் உருவாக்கவும், தந்தை பெரியார் அவர்களின் சமூக நீதி கொள்கைகளையும், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் அரசியலமைப்பு மதிப்புகளையும் கடைபிடிக்க உறுதியளிக்கிறது.

உள்ளாட்சி, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி

இக்கூட்டணி அரசு அமைப்பதற்காக மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தல்களிலும் இணைந்து செயல்படும். விஜய் மற்றும் ராகுல் காந்தி அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் இந்த வரலாற்றுச் தீர்ப்பை மதித்து, குறிப்பாக இளைஞர்களின் கனவுகள் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியளிப்பதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Author : கு. அஜ்மல்கான்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu