Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TVK - Congress: தவெக பக்கம் சாய்ந்த காங்கிரஸ்.. அழிவுகாலம் ஆரம்பம் என கடுமையாக விமர்சித்த திமுக!

TVK - Congress: தவெக பக்கம் சாய்ந்த காங்கிரஸ்.. அழிவுகாலம் ஆரம்பம் என கடுமையாக விமர்சித்த திமுக!

ABP Nadu 1 week ago

காங்கிரஸ் கட்சியில் சிலர் தங்களது சொந்த நலனுக்காக மட்டுமே செயல்படுவதால் அக்கட்சி அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.

இளங்கோவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணிக்கு 73 இடங்கள் கிடைத்தது. அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்று 3ம் இடம் பெற்றது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜய் அதனை இரு கட்சிகளின் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை நாடியுள்ளார். இதில் முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக கூறி விட்டது. அக்கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி நன்றி மறந்து விட்டதாக திமுக தொண்டர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனிடையே திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், "தமிழக வெற்றிக் கழகத்திடம் பெரும்பான்மை பலம் இல்லை. அதுதான் இங்கு பிரச்சனையாக உள்ளது. ஆட்சி அமைக்க அவர்களுக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போதைய சூழலுக்கு ஆட்சி அமைக்க அவருக்குக் குறைந்தபட்சம் 12 எம்.எல்.ஏ.க்களாவது தேவைப்படுகின்றனர். காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளித்த பிறகு இப்போது 112 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களுக்கு இன்னும் 6-7 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவைப்படுகிறது.

இத்தகைய சூழலில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் எப்படி அவர்களிடம் கேட்க முடியும்? அதனால்தான் ஆளுநர் அர்லேகர், 'பெரும்பான்மையைக் காட்டுங்கள்' என்று கூறியிருக்கிறார்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி அழிந்து கொண்டிருக்கிறது

தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தவெகவுடன் இணைந்தது பற்றிய பேசிய டி.கே.எஸ். இளங்கோவன், “காங்கிரஸ் தனது சொந்தத் தவறுகளால் ஒவ்வொரு மாநிலத்திலும் தோற்றுக்கொண்டிருக்கிறது. இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், சிலர் மட்டும் தான் காங்கிரஸ் கட்சியை நடத்தி வருகிறார்கள். அவர்கள் கட்சியின் நலன்களைப் பற்றி சிந்திக்காமல், தங்கள் சொந்த நலன்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். அதனால்தான் காங்கிரஸ் முற்றிலுமாக அழிக்கப்படுகிறது. கேரளாவின் வெற்றி வேறுபட்டது. இது மட்டும் காங்கிரஸுக்கு உதவாது. அவர்கள் தங்கள் கட்சியையே மூடிவிடும் ஒரு செயலைச் செய்து கொண்டிருக்கிறார்கள்” என கூறினார்.

மேலும், தேர்தல் குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ஆரம்பத்திலிருந்தே, அதாவது எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடங்கிய நாளில் இருந்தே, பல விஷயங்கள் நடந்து வருகின்றன. சில தொகுதிகளில் உள்ள விவி பேட் சீட்டுகளை நான் சரிபார்க்க விரும்புகிறேன். இதுகுறித்து எங்கள் தலைமையிடமும் நான் கேட்டுள்ளேன். ஏனென்றால், நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூருக்குச் சென்றபோது மக்கள் அழுது கொண்டிருந்தனர். அவர் தோற்றதை எண்ணி அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், அவர் கொளத்தூருக்காக பல நல்ல பணிகளைச் செய்திருந்தார். அவர் அவ்வப்போது தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்து வந்தார். அதன்பிறகு, இது எப்படி நடக்க முடியும் என்றுதான் நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். என்ன தவறு நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும் எனவும் டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu