Dailyhunt
TVK CPI Alliance: பரபரக்கும் அரசியல் களம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அழைத்தது தவெக; CPI முடிவு என்ன.?

TVK CPI Alliance: பரபரக்கும் அரசியல் களம்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கூட்டணிக்கு அழைத்தது தவெக; CPI முடிவு என்ன.?

ABP Nadu 1 week ago

மிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து, எந்த கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களை, அதாவது 108 இடங்களை வென்றுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.

அந்த வரிசையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தற்போது அழைப்பு விடுத்துள்ளது தவெக.

108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், கடந்த 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து, 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்தில் 3-ம் இடத்தில் இருந்த தவெக, போகப் போக முதல் இடத்தை பிடித்து, இறுதியில் 108 இடங்களில் வெற்றி வாகை சூடியது.

மற்ற கட்சிகள் பெற்ற இடங்கள்

  • திமுக - 59 இடங்கள்.
  • அதிமுக - 47 இடங்கள்.
  • காங்கிரஸ் - 5 இடங்கள்.
  • பாமக - 4 இடங்கள்.
  • ஐயூஎம்எல் - 2 இடங்கள்.
  • சிபிஐ - 2 இடங்கள்.
  • விசிக - 2 இடங்கள்.
  • சிபிஎம் - 2 இடங்கள்.
  • பாஜக - 1 இடம்.
  • தேமுதிக - 1 இடம்.
  • அமமுக - 1 இடம்.

கூட்டணி அமைக்க தவெக மும்முரம்

இதில், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறாத நிலையில், அதிகபட்சமாக 108 இடங்களை பிடித்த தவெகவிற்கு, விஜய் திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்யும் பட்சத்தில், இன்னும் 11 இடங்கள் தேவை. இப்பேது, ஒருபுறம் ஆட்சி அமைப்பதற்கு அழைப்பு விடுக்க ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள தவெக, மறுபுறம், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற, கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு

அதில் முதல் படியாக, 5 எம்எல்ஏ-க்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தவெக தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, தேர்தலுக்கு முன்பாகவே, தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எண்ணமாக இருந்தது. ஆனால், அப்போது அது கைகூடாமல் போனது.

இந்த நிலையில், தற்போது தவெக அழைப்பு விடுத்துள்ளதால், ஏற்கனவே திமுக உடன் மனக்கசப்பில் உள்ள காங்கிரஸ், தவெகவிற்கு ஆதரவு அளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் முடிவை இன்று அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு

இந்த நிலையில், 2 எம்எல்ஏ-க்களை வைத்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கூட்டணி அமைப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் நடைபெறும் சிபிஐ செயற்குழு கூட்டத்தில், தவெக அழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என சிபிஐ அறிவித்துள்ளது.

இதையடுத்து, அடுத்தடுத்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கும் பணியில் தவெக ஈடுபட்டுள்ளதால், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu