Dailyhunt
TVK Vijay - Cheran: விஜயை ஆதரித்தால் பாதிப்பு நமக்கு தான்.. இயக்குநர் சேரன் கடும் விமர்சனம்!

TVK Vijay - Cheran: விஜயை ஆதரித்தால் பாதிப்பு நமக்கு தான்.. இயக்குநர் சேரன் கடும் விமர்சனம்!

ABP Nadu 1 month ago

விஜயை ஆதரித்தால் பாதிக்கப்பட போவது நாம்தான் என இயக்குநர் சேரன் தெரிவித்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த முறை தமிழ்நாட்டில் 5 முனை போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, டாக்டர் ராமதாஸ் - சசிகலா கூட்டணி என்ற 5 முனை போட்டி நிலவுகிறது. இதனால் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படியான நிலையில் இயக்குநர் சேரன் இம்முறை சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு ஆதரவு.. விஜய்க்கு எதிர்ப்பு

முன்னதாக சில தினங்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட பதிவில், “எனக்கு சீமானும் அவரின் தம்பி தங்கைகளும் சட்டசபை செல்ல வேண்டும் என தோன்றுகிறது. ஏனெனில் இவர்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது, சமூக தீங்குகளை ஒழிப்பது.. நல் வளர்ச்சி திட்டங்களை முன்னெடுப்பது. எல்லா மேடைகளிலும் இவர் முழக்கம் எதிர்கால வாழ்வியல் பற்றியே இருப்பதால் இவர்கள் சட்டமன்றத்தில் இருந்தே ஆகவேண்டும்” என தெரிவித்தார்.

தொடர்ந்து மற்றொரு பதிவில், “புதுசா கட்சி ஆரம்பிச்சு மக்கள்கிட்ட ஓட்டு கேட்க வந்தா மக்களுக்கு என்ன பிரச்னை இருக்கு அதை தனது கட்சி எப்படி தீர்க்கும், நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம். அதற்கு தன்கிட்ட என்ன என்ன திட்டங்கள் இருக்குன்னு பேசனுமா இல்ல உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா இல்ல நான் வேணுமான்னு கேட்டா அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள, உங்க இருவருக்கும் என்ன பிரச்னைன்னு எங்களுக்கு தெரியல. உங்க ரசிகர்களுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன். அது என்ன எப்ப வந்தாலும் ரெண்டு கட்சிக்குத்தான் போட்டி. அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்” என வெளிப்படையாக கேள்வியெழுப்பினார்.

பாதிக்கப்பட போவது நாம்தான்

இந்த நிலையில் சேரன் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “விஜய் அவர்களின் அன்பு ரசிகர்களுக்கு... நானும் விஜயை ரசித்தவன் தான். அவர் திரைத்துறையில் ஒரு தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்தான். ஆனால் அரசியல் என வரும்போது அதை பல கோணங்களில் நாம் சிந்தித்து கையாள வேண்டி இருக்கிறது. அரசியல் என்பது ஒரு தலைவனின் வாழ்க்கை அல்ல. மக்களின் வாழ்க்கை, அந்த மக்கள் அறியாமையில் அவரை ஆதரிக்கிறேன் என்ற பெயரில் கண்மூடித்தனமாக நடந்து கொண்டால் பாதிக்கப்பட போவது நாம்தான்.

நீங்கள் ஒரு கருத்து வைத்தவரை ஆபாச வார்த்தைகள் பேசி அவர் பேசுவதை நிறுத்திவிடலாம் என நினைப்பதே உங்களுக்கு எந்த அளவு அரசியல் அறிவு இருக்கிறது என்பதை காட்டுகிறது. இதை படிக்கும் பொது மக்கள் உங்களை பற்றி, உங்கள் தலைவர் பற்றி என்ன நினைப்பார்கள் என சிந்திக்கவும். நல்ல விசயங்களை பகிர நினைப்பவனும் அடுத்த தலைமுறையை போதையிலிருந்து மீட்டெடுக்க நினைப்பவனும் என்றும் உன் தகாத பேச்சுக்கெல்லாம் அசரமாட்டான். நீங்க பேசுங்க தம்பிகளா, நான் உன் குடும்பத்தில் மூத்தவன் தான்... கடைசியில நீங்க உங்க வீட்டுல மனைவி குழந்தைகளோட நிக்கும்போது இந்த அண்ணன்கள் சொன்னது என்னவென புரியும்” என தெரிவித்துள்ளார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu