Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
TVK Vijay: இன்னைக்கு இல்ல, அப்ப விஜய் முதலமைச்சராவது எப்போது? பதவியேற்புக்கான சுபமுகூர்த்த தேதி தெரியுமா?

TVK Vijay: இன்னைக்கு இல்ல, அப்ப விஜய் முதலமைச்சராவது எப்போது? பதவியேற்புக்கான சுபமுகூர்த்த தேதி தெரியுமா?

ABP Nadu 1 week ago

TVK Vijay: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயால் 118 எம்.எல்.ஏக்களின் ஆதரவை காட்ட முடியாததால், இன்று திட்டமிடப்பட்டு இருந்த பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

விஜயின் பதவியேற்பு விழா ரத்து..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், பெரும்பான்மைக்கான 118 இடங்களை எட்டவில்லை. தொடர்ந்து, ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்குமாறு சில கட்சிகளுக்கு கடிதம் அனுப்பினார். அதன்படி, 5 எம்.எல்.ஏக்களை கொண்ட காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தது. இதையடுத்து ஆதரவு எம்.எல்.ஏக்களின் கடிதத்துடன் ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், இன்னும் போதுமான எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால், பெரும்பான்மையை நிரூபித்த பிறகு பதவி பிரமாணம் செய்து கொள்ளலாமென ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் நேரு உள்விளையாட்டு அரங்கி தீவிரமாக நடைபெற்று வந்த விஜயின் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழ்நாட்டில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்முறையாக முதலமைச்சர் ஆகும் நிகழ்வு, திட்டமிட்டபடி இன்று நடைபெறாது என கூறப்படுகிறது.

விஜய் பதவியேற்புக்கான புதிய தேதி என்ன?

பெரும்பான்மை கிடைத்த பிறகும், ஒருவேளை 8 என்ற எண் ராசி இல்லை என கருதினால், நாளையும் விஜய் பதவியேற்க வாய்ப்பில்லையாம். மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் அஷ்டமி வருவதால் அந்த நாட்களிலும் நல்ல காரியங்கள் செய்ய விஜய் விரும்பமாட்டாராம். மே 11 நவமி என்பதாலும், மே 12ம் தேதி செவ்வாய்க்கிழமை என்பதாலும் அந்த நாட்களிலும் பதவியேற்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என கூறப்படுகிறது. எனவே, ஒரே அடியாக வரும் மே 13ம் தேதி புதன்கிழமை என்பதோடு அன்றைய நாள் முகூர்த்த தினம் என்பதால், பதவியேற்புக்கான அடுத்த நிகழ்வு மே 13ம் தேதி திட்டமிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரபை மீறும் ஆளுநர்?

தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், தேர்தல் முடிவில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தரப்பை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பதே மரபு. அந்த அரசு தங்களுக்கான பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா? என்பதை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க வேண்டும். ஆனால், பொறுப்பு ஆளுநர் அர்லேகர், தன்னிடம் தனிப்பெரும்பான்மையை நிரூபித்தால் தான் ஆட்சி அமைக்கவே அழைப்பு விடுப்பேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம், காங்கிரசுடன் கூட்டணி வைத்த விஜய்க்கு, பாஜக மறைமுகமாக இப்போதே அழுத்தம் கொடுக்க தொடங்கிவிட்டதாக தவெகவினர் மற்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்ட தொடங்கியுள்ளனர்.

Author : குலசேகரன் முனிரத்தினம்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu