தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் கிட்டத்தட்ட வெளியாகிவிட்ட நிலையில், தற்போதைய(இரவு 10.30 மணி) நிலவரப்படி இன்னும் 14 இடங்களின் முடிவுகள் மட்டுமே வெளியாக வேண்டியுள்ளது.
இதில், தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களை கைப்பற்றி மாபெரும் சாதனை வெற்றியை பதிவு செய்கிறது. இந்நிலையில், தங்கள் எம்எல்ஏ-க்களை பாதுகாக்கும் விதமாக, தவெக ரிசார்ட் ஒன்றை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களை பார்ப்போம்.
கிட்டத்தட்ட வெளியான தேர்தல் முடிவுகள்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போதே, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான இடங்களில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து, 8.30 மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
முதல் ஒரு மணி நேரத்தில் 3-ம் இடத்தில் இருந்த தவெக, போகப் போக முதல் இடத்தை பிடித்து, தற்போது வரை அதை தக்க வைத்து வருகிறது. இதுவரை, அதாவது இரவு 10.30 மணி நிலவரப்படி, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள முடிவுகளின் படி,
- தவெக 102 இடங்களில் வெற்றியை பதிவு செய்து 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அவை அனைத்திலும் வெல்லும் பட்சத்தில் மொத்தம் 107 இடங்களை பிடிக்கும். அதில், விஜய் இரண்டு இடங்களில் வென்றதால், ஒரு இடத்தில் அவர் ராஜினாமா செய்யும் பட்சத்தில், மொத்தம் 106 இடங்களை தவெக கைப்பற்றும்.
- அடுத்த இடத்தில் திமுக 56 இடங்களில் வெற்றியை பதிவு செய்து 4 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அந்த தொகுதிகளிலும் திமுக வென்றால், அக்கட்சிக்கு மட்டும் மொத்தம் 60 இடங்கள் கிடைக்கும்.
- மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக 45 இடங்களில் வெற்றி பெற்று வெறும் 2 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதில் வென்றால் கூட, மொத்தம் 47 இடங்களையே அக்கட்சி கைப்பற்றும்.
- அடுத்தபடியாக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மொத்தம் 5 இடங்களை கைப்பற்றியுள்ளது.
- இதற்கு அடுத்த இடத்தில், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக 2 இடங்களில் வெற்றி பெற்று, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 2 இடங்களில் வெற்றி.
- சிபிஐ - 2 இடங்களில் வெற்றி.
- விசிக - 2 இடங்களில் வெற்றி.
- சிபிஎம் - 2 இடங்களில் வெற்றி.
- பாஜக - 1 இடத்தில் வெற்றி.
- தேமுதிக - 1 இடத்தில் வெற்றி.
- அமமுக - 1 இடத்தில் வெற்றி.
தவெக-விற்கு உள்ள வாய்ப்புகள்
இந்த முன்னிலை நிலவரங்களின்படி, 106 இடங்களை வைத்திருக்கும் தவெகவிற்கு பெரும்பான்மையை பெற இன்னும் 12 இடங்கள் தேவை. இந்நிலையில், திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்தாலே, தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்துவிடும். அதாவது,
பாமக - 4
ஐயூஎம்எல் - 2
சிபிஐ - 2
விசிக - 2
சிபிஎம் - 2
இவர்களின் ஆதரவு கிடைத்தாலே, விஜய்க்கு கூடுதலாக 12 இடங்கள் கிடைத்துவிடும். அதாவது காங்கிரஸ், பாஜக இல்லாமலேயே தவெக-வால் ஆட்சி அமைக்க முடியும்.
ரிசார்ட் தேடும் தவெக.?
இத்தகைய சூழலில், ஆட்சி அமைக்க தேவையான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டியுள்ளதால், அதுவரை தங்கள் எம்எல்ஏ-க்களை பாதுகாப்பாக வைத்திருக்க, கூவத்தூர் பாணியில் தவெக ஒரு ரிசார்ட்டை தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, தவெக சார்பில் வெற்றி பெறுபவர்கள் தன்னுடைய பனையூர் இல்லத்திற்கு வந்துவிட வேண்டும் என்று, வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளே விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தற்போது ரிசார்ட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எப்படி இருந்தாலும், தவெக எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கும் அளவிற்கு மற்ற கட்சிகளுக்கு இடங்கள் கிடைக்கவில்லை. இருந்தாலும், அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் அல்லவா. அதனால், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தவெக எடுத்தாலும் அது தவறில்லை என்றே கூறலாம்.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

