Dailyhunt
TVK Vijay: விஜய் தான் முதல்வர்.. மக்கள் தீர்ப்புக்கு குறுக்கே நிற்காதீங்க.. ஆளுநருக்கு கடும் கண்டனம்!

TVK Vijay: விஜய் தான் முதல்வர்.. மக்கள் தீர்ப்புக்கு குறுக்கே நிற்காதீங்க.. ஆளுநருக்கு கடும் கண்டனம்!

ABP Nadu 2 days ago

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை ஆட்சியமைக்க தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் அழைக்க வேண்டும் என அரசியல் மற்றும் திரைத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி வெளியிட்டுள்ள பதிவில், “ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டமன்றம் மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன. தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜயை மக்கள் முதலமைச்சர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன். பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் விஜயை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “மக்களின் தீர்ப்பை ஏற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் காலம் தாழ்த்தாமல் அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன். தேவையற்ற காலதாமதம் என்பது மறைமுகமாகக் குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் செயலாக முடிந்துவிடும். எனவே, ஆளுநர் சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் விஜய் அவர்களை முதல்வராகப் பொறுப்பேற்கவும், அமைச்சரவையை அமைக்கவும் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் அளித்துள்ள ஊடக பேட்டி ஒன்றில், “மக்கள் தீர்ப்பைத் தாமதப்படுத்தவும், கையாளவும் பாஜக மேற்கொண்ட முயற்சியை தமிழகம் நிராகரித்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆளுநர் 4-5 நாட்கள் அவகாசம் வழங்கலாம் என்றும், இதற்கு மேலும் என்ன தெளிவு தேவை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல இயக்குநர் ஓபெலி என்.கிருஷ்ணா வெளியிட்டுள்ள பதிவில், “தவெக தலைவர் விஜயை சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடத்தி நிரூபிக்கச் செய்வதுதான் இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகாக இருக்கும். பெரும்பான்மை மக்களாலும், குறிப்பாக இளைஞர்களின் நம்பிக்கையாலும் தேர்வு செய்யப்பட்ட ஒருவருக்கு உரிய ஜனநாயக மரியாதை வழங்கப்பட வேண்டும். மக்களின் தீர்ப்பை மதிப்பதே ஜனநாயகத்தின் உயர்ந்த பண்பாகும்” என கூறியுள்ளார்.

இயக்குநர் வெங்கட்பிரபு வெளியிட்ட பதிவில், “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்” என கூறியுள்ளார்.

Author : பேச்சி ஆவுடையப்பன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu