Two Wheeler Sales March 2026: மார்ச் மாதம் விற்பனையில் அசத்தில் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
இருசக்கர வாகனங்கள் விற்பனை
கடந்த மார்ச் மாதத்தில் பெரும்பாலான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள், ஆரோக்கியமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை வலுவாக இருந்ததால், கடந்த 2025-26 நிதியாண்டை உற்பத்தி நிறுவனங்கள் வலுவாக நிறைவு செய்துள்ளன. அந்த வகையில், மார்ச் மாதத்தில் விற்பனையில் அசத்திய நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விற்பனையில் அசத்திய மோட்டார் சைக்கிள் நிறுவனங்கள்:
1. ஹீரோ மோட்டோகார்ப்
கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 604 இருசக்கர வாகனங்களை விற்ற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 198 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் மட்டுமே நிறுவனத்தின் விற்பனை 5 லட்சத்து 10 ஆயிரத்து 86 யூனிட்டுகளிலிருந்து 5 லட்சத்து 52 ஆயிரத்து 505 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. ஏற்றுமதி செய்யப்பட்ட யூனிட்டுகளின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 518-லிருந்து 45 ஆயிரத்து 696 யூனிட்களாக பெருகியுள்ளது. ஸ்கூட்டர்களின் விற்பனை கடந்த ஆண்டு மார்ச்சில் 42 ஆயிரத்து 963 யூனிட்களாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 65 ஆயிரத்து 815 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
2. ஹோண்டா மோட்டார் சைக்கிள்
ஹுண்டாய் மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தை காட்டிலும், இந்த மார்ச் மாதத்தில் 29 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து, 5 லட்சத்து 49 ஆயிரத்து 145 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. 5 லட்சத்து 12 ஆயிரத்து 303 யூனிட்கள் உள்நாட்டிலும், 36 ஆயிரத்து 842 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக கடந்த 2025-26 நிதியாண்டில் உள்நாட்டில் 57 லட்சத்து 49 ஆயிரத்து 275 யூனிட்களும், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி மூலம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 229 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

3. டிவிஎஸ் மோட்டார்
கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் 4 லட்சத்து 120 யூனிட்டுகளாக இருந்த டிவிஎஸ் நிறுவனத்தின் விற்பனை, இந்த ஆண்டில் 25 சதவிகிதம் அதிகரித்து 4 லட்சத்து 98 ஆயிரத்து 134 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு விற்பனை மட்டும் குறிப்பிட்ட காலகட்டத்தில் 2 லட்சத்து 97 ஆயிரத்து 622 யூனிட்களிலிருந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 383 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இதில் மோட்டார் சைக்கிள் விற்பனை 2 லட்சத்து 32 ஆயிரத்து 788 யூனிட்டுகளாகவும், ஸ்கூட்டர் விற்பனை 2 லட்சத்து 17 ஆயிரத்து 624 யூனிட்டுகளையும் டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது.
4. சுசூகி மோட்டார் சைக்கிள்
சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 164 யூனிட்களை விற்பனை செய்த நிலையில், நடப்பாண்டில் அந்த எண்ணிக்கை 2 சதவிகிதம் உயர்ந்து ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 227 யூனிட்களாக அதிகரித்துள்ளது. உள்நாட்டு சில்லறை விற்பனை 98 ஆயிரத்து 176 யூனிட்களிலிருந்து 11 சதவிகிதம் அதிகரித்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 661 யூனிட்களாக பதிவாகியுள்ளது.

5. ராயல் என்ஃபீல்ட்
கடந்த ஆண்டின் மார்ச் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 11 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதன்படி, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 334 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 12 லட்சத்து 38 ஆயிரத்து 659 யூனிட்களை விற்பனை செய்து, ப்ராண்ட் சார்பில் ஒரு நிதியாண்டில் இதுவரை இல்லாத அதிகப்படியான விற்பனையை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பதிவு செய்துள்ளது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 10 லட்சம் யூனிட்கள் என்ற விற்பனையை கடந்துள்ளது.
மின்சார இருசக்கர வாகன பிரிவில் யார் ஆதிக்கம்..
1. டிவிஎஸ் மின்சார வாகனங்கள்
மின்சார இருசக்கர வாகன பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டிவிஎஸ் நிறுவனமானது, கடந்த மார்ச் மாதத்தில் 49 ஆயிரத்து 304 இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதில் எக்ஸ், ஐக்யூப் மற்றும் புதியதாக அறிமுகமான ஆர்பிட்டர் ஆகியவை வலுவான பங்களிப்பை கொண்டுள்ளன. இது 2025ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பதிவான 30 ஆயிரத்து 772 யூனிட்களை காட்டிலும் 60 சதவிகிதம் அதிகமாகும். வாடகை பேட்டரி வசதியையும் ஆர்பிட்டரில் அறிமுகப்படுத்தியது நிறுவனத்தின் விற்பனையை ஊக்குவித்துள்ளது.

2. பஜாஜ் மின்சார வாகனம்
பஜாஜ் நிறுவனம் தனது ஒரே மின்சார ஸ்கூட்டரான சேடக்கின் 46 ஆயிரத்து 246 யூனிட்களை விற்பனை செய்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டின் மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவிகிதம் அதிகமாகும். அதோடு, 30 ஆயிரம் யூனிட்களை கடந்த ஒரே மாதம் என்ற கடந்த பிப்ரவரி மாத சாதனையை மார்ச் மாதத்திலேயே பாஜாஜ் முறியடித்துள்ளது. சேடக்கிலும் வாடகை அடிப்படையிலான பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது.
3. ஏதர் மின்சார வாகனம்
பெங்களூரை தளமாக கொண்ட மின்சார வாகன ஸ்டார்ட்-அப் நிறுவனமான ஏதர், இந்த பிரிவில் மூன்றாவது இடத்தை உறுதியாக பிடித்துள்ளது. மார்ச் மாதத்தில் 35 ஆயிரத்து 688 யூனிட்களை விற்பனை செய்து, 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தை காட்டிலும் 128 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. நிறுவனம் சார்பில் ஒரே மாதத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்வது இது ஐந்தாவது முறையாகும். 30 ஆயிரம் என்ற யூனிட்களை தாண்டுவது இதுவே முதல்முறையாகும்.
4. விடா - 21,434 யூனிட்கள்
5. ஓலா - 11,117 யூனிட்கள்
Author : குலசேகரன் முனிரத்தினம்

