Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"உடனே ஆக்சன் எடுங்க!" செங்கல்பட்டு மீட்டிங்கில் அமைச்சர் சரத்குமார் போட்ட அதிரடி உத்தரவு!

"உடனே ஆக்சன் எடுங்க!" செங்கல்பட்டு மீட்டிங்கில் அமைச்சர் சரத்குமார் போட்ட அதிரடி உத்தரவு!

ABP Nadu 2 weeks ago

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் D.சரத்குமார் அரசு நலத்திட்டங்களை வழங்கி, துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் மொத்தம் ₹2.75 கோடி மதிப்பிலான அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அரசு சேவைகளை துரிதப்படுத்துவதே இந்த அரசின் நோக்கம் என்று குறிப்பிட்ட அமைச்சர், துறை சார்ந்த குறைகளைக் கேட்டறிந்து அதிகாரிகளுக்குப் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறை

விவசாயிகள் வேளாண் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக டிராக்டர் மற்றும் ஃபுல் டவுசர் போன்ற வேளாண் இயந்திர வாகனங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மற்றும் விதைகள் இருப்பில் உள்ளதா என்பது குறித்துக் கேட்டறியப்பட்டது. மேலும், நியாயவிலைக் கடைகள் அதிகப்படியாக வாடகை நுகர்வோர் கட்டிடங்களில் இயங்குவது குறித்துச் சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை கூட்டுறவு வங்கிகளின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள 40-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களைப் பன்றிகள் சேதப்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

மின்சாரம் மற்றும் சுகாதாரம்

மின்சார வாரியத்தில் ஏற்படும் மின் துண்டிப்புப் பிரச்சினைகளைத் தவிர்க்க, மின்வாரியத்தினர் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. மின் பற்றாக்குறையைப் போக்க கூடுதல் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு, மின்மிகை மாநிலமாக உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் துறையில் பணியாளர்கள் நோயாளிகளிடம் கடுமையான முறையில் நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் உள்ள கழிவறைகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற உறுப்பினர்கள் இதனைத் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பள்ளிக்கல்வி மற்றும் வருவாய்த்துறை

பள்ளிகளில் மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், அடிப்படை வசதிகள், கழிவறை தூய்மை மற்றும் சத்துணவின் தரம் குறித்துச் சட்டமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. பெண்களின் சுகாதாரத்தை உறுதி செய்ய கூடுதல் நாப்கின் எரிக்கும் இயந்திரங்கள் தேவைப்படின், உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. வருவாய்த்துறையில் வரப்பெறும் பட்டா மனுக்களில், நீர்நிலை புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களுக்குப் பட்டா வழங்க இயலாது என்று தெளிவுபடுத்தப்பட்டது. அதேநேரம், பட்டா பெயர் மாற்றம் மற்றும் இதர முறையான பட்டா கோரும் மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

போக்குவரத்து, டாஸ்மாக் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன்

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமிக்க வழிவகை செய்யப்படும். டாஸ்மாக் மதுபானக் கூடங்களுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்துப் பாதிப்பைத் தவிர்க்க, தனிப்பட்ட முறையில் பாதுகாவலர்களை (செக்யூரிட்டிகள்) நியமித்து போக்குவரத்தைச் சீர் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பு மனுக்களுக்குத் தீர்வு காணும் வகையில், அவர்களுக்கென சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை உருவாக்கி உடனடி தீர்வு காண உத்தரவிடப்பட்டது. அரசுத் திட்டங்களைச் சேவையாகக் கருதி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இந்த அரசு திறந்தநிலை மற்றும் ஊழலில்லா அரசாகச் செயல்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu