Upcoming Kia SUV: கியா சார்பில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள 4 எஸ்யுவிக்களில் மின்சார எடிஷன், ஹைப்ரிட் மற்றும் புதிய தலைமுறை சோனெட் ஆகியவை அடங்குமாம்.
கியாவின் 4 புதிய எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதில், தென்கொரியா நிறுவனமாக கியா மிகவும் தீவிரமாக உள்ளது. அதன்படி, உள்ளூர் சந்தையில் பல்வேறு பேட்டரி மின்சார மற்றும் வலுவான ஹைப்ரிட் கார்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்பட்ட அர்பன் எலெக்ட்ரிக் கார்கள், ப்ரீமியம் ஃப்ளாக்ஷீப் ஹைப்ரிட் மற்றும் அதிகம் விற்பனையாகும் காரின் முற்றிலும் மறுவடிவமைக்கப்பட்ட எடிஷன் என மொத்த 4 புதிய எஸ்யுவிக்கள் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ளன. அதன்படி, 2026-27 காலகட்டத்தில் விற்பனைக்கு வரவுள்ள இந்த கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ள்ன.
கியாவின் புதிய எஸ்யுவிக்கள் எப்படி?
1. கியா சைரோஸ் மின்சார கார்
உள்ளூர் சந்தையில் கியாவின் மிகவும் சிறிய மின்சார காராக மட்டுமின்றி, நடைமுறைக்கு உகந்த குடும்பத்திற்கு ஏற்ற வாகனமாகவும் சைரோஸ் EV ஆனது வரும் ஆகஸ்ட் மாதம் சந்தைப்படுத்தப்பட உள்ளது. கே1 ஆர்கிடெக்ட்சர் அடிப்படையில், போட்டியாளர்களை காட்டிலும் இதில் நல்ல விசாலமான கேபின் இடவசதி இருக்கும் என கூறப்படுகிறது. 42KWh மற்றும் 49KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு, நில உலக பயன்பாட்டில் 350 முதல் 400 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாம். ரூ.14 முதல் ரூ.18 லட்சம் வரையிலான விலை வரம்பில், உள்ளூர் சந்தையில் டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்த்ராவின் XUV 3X0 போன்ற மின்சார மாடல்களுடன் போட்டியிட உள்ளதாம்.
2. கியா சொரெண்டோ 7 சீட்டர் ஹைப்ரிட்
வரும் அக்டோபர் - நவம்பர் காலகட்டங்களில் அறிமுகப்படுத்த வாப்புள்ளதாக கூறப்படும், கியா சொரெண்டோ 7 சீட்டரானது ப்ராண்டின் ஃப்ளாக்ஷீப் ப்ரீமியம் எஸ்யுவி ஆக நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ப்ராண்டின் வலுவான ஹைப்ரிட் தொழில்நுட்பமும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. புதிய சொரெண்டோ 4815 மிமீ நீளம், 1900 மிமீ அகலம் மற்றும் 1700 மிமீ உயரம் கொண்டிருக்கக் கூடும். இந்த எஸ்யுவி 2815 மிமீ நீளமுள்ள வீல்பேஸில் இயங்குகிறது. XUV 7XO உடன் ஒப்பிடும்போது, சொரெண்டோ 120 மிமீ நீளமாகவும், 10 மிமீ அகலமாகவும், 55 மிமீ உயரம் குறைவாகவும் உள்ளது. இந்தியாவிற்கான எடிஷனில் 1.5 லிட்டர் வலிமையான ஹைப்ரிட் பவர்டிரெய்ன் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த பவர்டிரெய்ன், கியா செல்டோஸ் ஹைப்ரிட் மற்றும் அடுத்த தலைமுறை ஹுண்டாய் க்ரேட்டாவிலும் பயன்படுத்தப்பட உள்ளதாம். ஐரோப்பாவில் புதிய செல்டோஸில் உள்ள 1.6 லிட்டர் ஹைப்ரிட் இன்ஜினையும் கியா பயன்படுத்தக்கூடும். இதன் விலை ரூ.30 லட்சம் வரை நிர்ணயிக்கக் கூடுமாம். உள்ளூரில் மஹிந்த்ரா XUV 7XO மாடலுடன் போட்டியிட உள்ளது.
3. அடுத்த தலைமுறை கியா சோனெட்
தற்போதைய சோனெட் காரின் பின் இருக்கையில் குறைந்த இடவசதி இருப்பதாக பயனர்கள் சாடுகின்றனர். இந்நிலையில் அடுத்த தலைமுறை சோனெட் மூலம், புதிய ப்ளாட்ஃபார்மிற்கு மாறி அந்தப் பிரச்சனையை சரிசெய்ய கியா முயல்கிறது. தற்போதைய K2 ப்ளாட்ஃபார்மிற்குப் பதிலாக, அடுத்த தலைமுறை கியா சோனெட், புதிய ஹுண்டாய் வென்யூவிற்கும் அடிப்படையாக இருக்கும் புதிய K1 ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அடுத்த தலைமுறை சோனெட் மிகவும் நிமிர்ந்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். இதன் ஸ்டைலிங், செல்டோஸ் மற்றும் EV9 உள்ளிட்ட பெரிய கியா எஸ்யுவிக்களின் தாக்கத்தை பெறக்கூடும். தற்போதுள்ள 1.2 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட், 1.0L டர்போ பெட்ரோல் மற்றும் 1.5L டீசல் இன்ஜின்களைத் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. இருப்பினும், கியா தனது சிறிய மாடல்களுக்கு சக்தி அளிப்பதற்காக ஒரு புதிய ஆரம்ப நிலை ஹைப்ரிட் பவர்டிரெய்னை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஹைப்ரிட் மாடல் 2028-ஆம் ஆண்டுக்குள் சோனெட் லைன் - அப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.7 முதல் ரூ.14 லட்சம் வரையிலான விலை வரம்பில், டாடா நெக்ஸான், மாருதி ப்ரேஸ்ஸா, ஹுண்டாய் வென்யு ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

4. கியா செல்டோஸ் ஹைப்ரிட்
மாருதி விக்டோரிஸ், டொயோட்டா ஹைப்ரிட், ரெனால்ட் டஸ்டர் ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில், ரூ.18 தொடங்கி ரூ.25 லட்சம் வரையிலான விலை வரம்பில் செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷன் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. 2027ம் ஆண்டு சந்தைப்படுத்தப்பட உள்ள இந்த காரானது தற்போதுள்ள 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ஒரு சிறிய பேட்டரி பேக்கையும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்நிறுவனம், ஒரு லிட்டருக்கு சுமார் 25 கி.மீ. எரிபொருள் சிக்கனத்தை அடைய இலக்கு வைத்துள்ளது.
Author : குலசேகரன் முனிரத்தினம்

