Dailyhunt
US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?

US Iran War Pakistan: 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டம்; குப்பையில் போட்ட ஈரான்; பல்பு வாங்கிய பாகிஸ்தான்; நடந்தது என்ன.?

ABP Nadu 1 week ago

ரானை இன்று இரவு முழுவதுமாக அழிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், ஒருபுறம் கடைசி கட்ட போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான், எகிப்து, துருக்கி இணைந்து, அமெரிக்கா - ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்துவரும் நிலையில், அவர்கள் அளித்த 45 நாட்கள் போர்நிறுத்த வரைவு திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. இதனால், இன்று இரவு என்ன நடக்குமோ என்ற உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான், எகிப்து, துருக்கி நாடுகள் இணைந்து தயாரித்த வரைவு திட்டம்

அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ஈரானும் அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சொல்லப் போனால், ட்ரம்ப்பின் அனைத்து எச்சரிக்கைகளையும் நிராகரித்து, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இரு நாட்களுக்கு முன்பு கூட, அமெரிக்க போர் விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்திய நிலையில், அதிலிருந்து தப்பிய ஒரு வீரரை, ஈரானுக்குள் புகுந்து அமெரிக்க படை மீட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, ஈரானுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு வரை கெடு விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அதற்குள் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் வரவில்லை என்றால், அந்நாட்டை முழுமையாக அழித்து விடுவதாக மிரட்டியுள்ளார். அதற்கான தாக்குதல் திட்டமும் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மறுபுறம், பாகிஸ்தான், எகிப்து, துருக்கி நாடுகள் இணைந்து, அமெரிக்கா - ஈரான் இடையே சமசரத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. ஏற்கனவே, மத்தியஸ்தம் செய்து வருவதாக பாகிஸ்தான் கூறியபோது, அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று ஈரான் மறுத்திருந்தது. ஆனாலும், ஒருபுறம் போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவே கூறப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் தலைமையிலான நாடுகள் இணைந்து, ஒரு வரைவு திட்டத்தை உருவாக்கி, 45 நாட்கள் போர்நிறுத்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய அந்த வரைவு திட்டத்தை, அமெரிக்கா மற்றும் ஈரானிடம் ஒப்படைத்துள்ளன.

அதாவது, அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப் அரக்சி ஆகியோருக்கு அந்த வரைவு திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வரைவுத் திட்டம் 2 கட்டங்களாக செயல்படும்

இரு கட்டங்களாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ள இந்த வரைவு திட்டத்தின்படி, முதல் உடனடி போர் நிறுத்தம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

2-ம் கட்டத்தில், ஈரானின் அணுசக்தித் திட்டம், உயர் செறிவு யுரேனிய கையிருப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு, நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படும்.

போர்நிறுத்த வரைவு திட்டத்தை நிராகரித்த ஈரான்

ஈரானுக்கு ட்ரம்ப் இறுதியாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அவரது எச்சரிக்கையை முட்டாள்தனமானது என்று கூறி ஏளனம் செய்து, அதை நிராகரித்தது ஈரான்.

இதையடுத்து, ட்ரம்ப் கொடுத்த காலக்கெடு இன்று இரவு முடிவடைய உள்ள நிலையில் தான், பாகிஸ்தான் தலைமையில் போர்நிறுத்த வரைவுத் திட்டம் இரு நாடுகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்த போர்நிறுத்த வரைவு திட்டத்தை ஈரான் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான தனது பதிலை, மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான் மூலம் தெரிவித்துள்ளதாக ஈரான் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், இது குறித்து தெரிவித்துள்ள எகிப்தில் உள்ள ஈரான் தூதரகத்தின் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர், பெறும் போர் நிறுத்தத்தை மட்டும் தாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், மீண்டும் தாங்கள் தாக்கப்பட மாட்டோம் என்ற உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இதனால், இன்று இரவு என்ன நடக்குமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால், ஈரான் அது பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.

Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu