மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது.
நேற்று இரவு, அமெரிக்கா ஈரான் மீது புதிய ராணுவத் தாக்குதல்களை தொடுத்ததுடன், ஈரானிய எண்ணெயின் சர்வதேச விற்பனைக்கான ஒரு முக்கிய விலக்கையும் ரத்து செய்தது. ஹார்முஸ் ஜலசந்தியில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தாக்குதல் குறித்து அமெரிக்க ராணுவம் பதிவு
ஈரான் போர் நிறுத்தத்தை மீறி, பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் (சென்ட்காம்) குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ஈரான் கடும் எதிர்வினையாற்றியுள்ளதோடு, அமெரிக்காவின் இந்த செயல், போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என்றும் கூறியுள்ளது.
அமெரிக்க ராணுவ கட்டளை மையத்தின் (சென்ட்காம்) கூற்றுப்படி, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கடலோரக் கண்காணிப்பு மையங்கள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் ஆளில்லா விமான ஏவுதளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிரிக், கெஷ்ம் தீவு மற்றும் பந்தர் அப் ஆகிய இடங்களில் பல வெடிப்புகள் நிகழ்ந்ததை ஈரானிய ஊடகங்கள் உறுதிப்படுத்தின.
முன்னதாக, நேற்று முன்தினம் ஹார்முஸ் ஜலசந்தியில் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதில், அந்த இரண்டு கப்பல்களுக்கும் கணிசமான சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து, ஈரானை குற்றம் சாட்டியிருந்தது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையினர் 2 கப்பல்களையும் தாக்கியதாக தகவல் வெளியான நிலையில், இந்த சம்பவம் குறித்து ஈரான் இதுவரை அதிகாரப்பூர்வ அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தான், புதிய தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
ஈரான் - அமெரிக்கா இடையே அதிகரிக்கும் பதற்றம்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே சமீபத்தில் தான் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முன்னதாக, அமெரிக்க தாக்குதலில் ஈரான் தனது உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். கமேனியுடன், மேலும் பல ஈரானிய உயரதிகாரிகளும் கொல்லப்பட்டனர். இந்நிலையில், தனது ராணுவம் ஈரானுக்கு ஒரு கடுமையான அடியை கொடுத்துள்ளது என்றும், இப்போது துக்கம் அனுசரிக்க வேண்டிய நேரம் இது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கூறினார்.
இதனிடையே, 2 நாட்களுக்கு முன் ஹார்முஸில் 2 கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலால் கோபமடைந்த அமெரிக்கா, ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு பதிலடியாக, ஈரானும், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதனால் ஏற்பட்ட பதற்றம் தனிவதற்குள், தற்போது புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
Author : ஸ்ரீராம் ஆராவமுதன்

