Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
உஷார்..! சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் 5 கி.மீ-க்கு ஸ்தம்பித்த வாகனங்கள்; என்னாச்சு தெரியுமா?

உஷார்..! சென்னை - பெங்களூர் நெடுஞ்சாலையில் 5 கி.மீ-க்கு ஸ்தம்பித்த வாகனங்கள்; என்னாச்சு தெரியுமா?

ABP Nadu 3 months ago

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சாலை விரிவாக்கப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதே இந்த ஸ்தம்பிப்பிற்கு முக்கியக் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

10 ஆண்டுகளாகத் தொடரும் ஆமைவேகப் பணிகள்

சென்னை மற்றும் பெங்களூரை இணைக்கும் மிக முக்கிய வழித்தடமான இந்த தேசிய நெடுஞ்சாலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் அரைகுறையாக நின்றுகொண்டிருக்கின்றன. இதனால், பிரதான சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்காலிகச் சாலையால் உருவான முடக்கம்

நெடுஞ்சாலைப் பணிகள் நடக்கும் இடங்களில் வாகனப் போக்குவரத்திற்காக தற்காலிகமாக மாற்றுச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த மாற்றுச் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் செல்ல முடியாமல் திணறி வருகின்றன. இந்தச் சாலையை நாள்தோறும் ஆயிரக்கணக்கான இலகுரக வாகனங்கள் மட்டுமின்றி, ஸ்ரீபெரும்புதூர் சுற்றியுள்ள தொழிற்சாலைகளுக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகளும் பயன்படுத்தி வருகின்றன.

5 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்த வாகனங்கள்

இன்று காலை, குறுகலான தற்காலிகச் சாலையில் கனரக வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து சென்றதால், திடீரென கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை நோக்கிச் செல்லும் பாதையிலும், மறுபுறம் வேலூர் நோக்கிச் செல்லும் பாதையிலும் இரு திசைகளிலும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அசைவற்று நின்றன. இதனால் ஒட்டுமொத்த நெடுஞ்சாலையும் வாகனக் கடலாகக் காட்சியளித்தது.

பணிக்குச் செல்வோர் மற்றும் மாணவர்கள் பாதிப்பு

இந்தக் கடுமையான போக்குவரத்து நெரிசல் காலை நேரத்தில் ஏற்பட்டதால், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ள சிப்காட் தொழிற்சாலைகளுக்குச் செல்லும் ஊழியர்கள், ஐடி நிறுவனப் பணியாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் குறித்த நேரத்திற்குச் செல்ல முடியாமல் நீண்ட நேரம் சாலையிலேயே தவித்து நின்றனர். அவசரத் தேவைகளுக்கான வாகனங்கள் கூட கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

போலீசார் மீது வாகன ஓட்டிகள் அதிருப்தி

நெடுஞ்சாலையில் இவ்வளவு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டும், அதனைச் சீரமைக்கவோ, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போதிய அளவில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபடுத்தப்படவில்லை என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

பத்தாண்டுகளாக இழுபறியில் நீடிக்கும் இந்த சாலை விரிவாக்கப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து, நிரந்தரப் தீர்வுகாண வேண்டும் என்றும், அதுவரை தற்காலிகச் சாலைகளில் போக்குவரத்தைச் சீராகப் பராமரிக்க கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Author : கிஷோர்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: ABP Nadu